

நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 21 வயது கவுசுகி குமரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவர், 1,506 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வசந்தாவை தோல்வியடையச் செய்தார். இதன் மூலம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு குறைந்த வயதில் தேர்வான வார்டு உறுப்பினர் என்ற பெருமையை கவுசுகி பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘பி.ஏ. பட்டம் பெற்று சட்டப் படிப்பு பயில உள்ள நிலையில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் போட்டியிட்டேன்.என்னை மக்கள் வெற்றி பெற்றி பெறச் செய்துள்ளனர்.
எங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு மாநகராட்சியில் குரல் கொடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பணியாற்றுவேன்’’ என்றார்.