வரும் தேர்தலில் 220 இடங்களை கைப்பற்றுவோம்: பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை

வரும் தேர்தலில் 220 இடங்களை கைப்பற்றுவோம்: பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் 220 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.

திருப்பத்தூர் - தருமபுரி பிரதான சாலை ரயில்வே மேம்பாலம் அருகே பாமக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், பாமக வேட்பாளர்கள் டி.கே.ராஜா (திருப்பத்தூர்), பொன்னுசாமி (ஜோலார்பேட்டை) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பாமக தலைவர் ராமதாஸ் பேசும்போது, “வேலூர் மாவட்டத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் என பாமக கூறிவருகிறது.

அரசியல் ரீதியாக அதிமுக – திமுக கட்சிகள் எதிரெதிர் அணியாக இருந்தாலும், மது விற்பனையால் கூட்டாக செயல்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் மது விற்பனை மூலம் ரூ.75 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பேன் என்றும், படிப்படியாக மது விலக்குகொண்டு வரப்படும் எனக்கூறுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். திராவிடக் கட்சிகள் பஞ்ச பூதங்களான நீர் (வீராணம்), நிலம் (தாதுமணல், ஆற்றுமணல்), காற்று (2ஜி அலைவரிசை) ஆகியவை மூலம் ரூ.75 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர்.

இந்த 2 ஊழல் கட்சிகளுக்கு மே 19-ம் தேதி விடை காத்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து திராவிடக் கட்சிகளை அகற்றவே, பாமக புதிய அவதாரம் எடுத்துள்ளது.

எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 220 தொகுதிகளை பிடித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். திராவிடக்கட்சிகள் 14 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றுவர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in