Published : 23 Feb 2022 05:40 AM
Last Updated : 23 Feb 2022 05:40 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு மாநகராட்சி, 8 நகராட்சிகள் திமுக வசமானது: ஒற்றை இலக்க வெற்றியில் சுருங்கிய அதிமுக

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பேரூராட்சிகளுக் கான வாக்குகள் எண்ணும் பணியை நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். அருகில், தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி உள்ளிட்டோர்.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு மாநகராட்சி, 8 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ம் தேதி நடந்துமுடிந்த நிலையில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை தந்தை பெரியார் ஈ.வெ.ரா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும், குடியாத்தம் நகராட்சிக்கு ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம்பட்டு நகராட்சிக்கு மரீத் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலை கல்லூரியிலும், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேரூராட்சிகளுக்கு பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான்வென்டிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சிகளுக்கு பள்ளிகொண்டா ஆர்.சி.எம் பள்ளி வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றன.

திமுக வசமான உள்ளாட்சிகள்

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகள் கொண்டது. இதில், 7, 8-வது வார்டில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றனர். மற்ற 58 வார்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி முடிவில் திமுக 44, அதிமுக 7, சுயேச்சைகள் 6, பாஜக, பாமக, வி.சி.க தலா ஓரிடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் அதிமுக 7 இடங்களில் மட்டும் வெற்றிபெற்று ஒற்றை இலக்கத்தில் சுருங்கியது. திமுக 44 வார்டுகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மாந கராட்சியை கைப்பற்றியுள்ளது.

குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் திமுக 21, கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் மற்றும் மதிமுக தலா ஓரிடங்களிலும், அதிமுக 9, அதன் கூட்டணியான புரட்சி பாரதம் கட்சி ஓரிடத்திலும், பாஜக ஓரிடத்திலும் மற்றும் சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பேரணாம்பட்டு நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக 14, காங்கிரஸ் 1, மனித நேய மக்கள் கட்சி 1, திமுக கூட்டணியில் இருந்து விலகி 6 இடங்களில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஓரிடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 20 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக ஒட்டுமொத்த தோல்வியை சந்தித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளின் தேர்தல் முடிவு வெளியானது. இதில், ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் திமுக 23, அதிமுக 4, சுயேச்சை, காங்கிரஸ், வி.சி.க தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 15, காங்கிரஸ் 4, அதிமுக 1, அமமுக 4, பாமக 2, சுயேச்சை 1 வெற்றி பெற்றுள்ளனர். வாலாஜா நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் திமுக 14, அதிமுக 7, விஜய் மக்கள் இயக்கம், பாஜக, பாமக தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் திமுக 24, அதிமுக 8, சுயேச்சை 2, அமமுக 1, காங்கிரஸ் 1 வெற்றிபெற்றுள்ளனர். மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக15, அதிமுக 2, சுயேச்சை 1, விஜய் மக்கள் இயக்கம் 1, பாமக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் திமுக 18, சுயேச்சை 3, அதிமுக 4, பாமக 3, வி.சி.க 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

பேரூராட்சிகள்

வேலூர் மாவட்டத்தில் 15 வார்டுகள் கொண்ட ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் திமுக 13, அதிமுக 2 இடங்களிலும், 15 வார்டுகள் கொண்ட பென்னாத்தூர் பேரூராட்சியில் திமுக 8, பாமக 5, அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளிகொண்டா பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக 14, அமமுக, அதிமுக தலா ஓரிடங்களிலும், சுயேச்சைகள் 2 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். திருவலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 9, அதிமுக 5, சுயேச்சை ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை பேரூராட்சியில் உள்ள 15 வார்டில் அதிமுக 8, திமுக 7 வார்டில் வெற்றி பெற்றுள்ளனர். திமிரி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 9, சுயேச்சைகள் 3, அதிமுக 2, வி.சி.க ஓரிடம். விளாப்பாக்கம் பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 6, அதிமுக 3, விசிக1, சுயேச்சைகள் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 8, அதிமுக 4, சுயேச்சைகள் 2, காங்கிரஸ் ஓரிடம். நெமிலி பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 5, அதிமுக 6, சுயேச்சைகள் 3, பாமக ஓரிடம்.

பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 8, காங்கிரஸ் 3, அதிமுக 1, சுயேச்சைகள் 2, விசிக ஓரிடம். தக்கோலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 7, அதிமுக 6, பாமக, சுயேச்சைகள் தலா ஓரிடம். அம்மூர் பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 6, அதிமுக 6, பாமக2, சுயேச்சை ஓரிடம் வெற்றி பெற்றுள்ளனர். வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தம் 12 பேரூராட்சிகளில் 9-ல் திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. அம்மூர், நெமியில் இழுபறி நிலவுகிறது. கலவை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x