

மதுரை: மேயர் வேட்பாளர் போட்டியை டார்கெட் வைத்து, மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக கவுன்சிலர்கள், நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை சந்தித்து வாழ்த்து பெற படையெடுத்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநரகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக 77 வார்டுகளில் போட்டியிட்டது. மற்ற வார்டுகளில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை வெளியான நிலையில், மதுரை மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றியுள்ளது. திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்று திமுக மேயர் பதவியை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெற்றிப் பெற்ற திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர் கனவில் மிதக்கத் தொடங்கினர். அதனை உறுதி செய்ய விரும்பிய திமுக கவுன்சிலர்கள் பலர் வெற்றி பெற்றதும் தங்கள் குடும்பத்தினருடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற ஆர்வமடைந்தனர்.
வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள், ஒருவர் பின் ஒருவராக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை சென்று சந்திக்க படையெடுத்ததால் அவரது அலுவலகம் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. மதுரை மாநகராட்சி திமுக வேட்பாளர் தேர்வு செய்வதில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அவர்தான் மேயர் வேட்பாளரை கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்ய இருப்பதாகவும் கூறப்படுவதால் அவரை திமுக கவுன்சிலர்கள் சந்திக்க ஆர்வமடைந்ததாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், மேயர் வேட்பாளர்களுக்கு பரிந்துரை செய்ய அமைச்சர் மூர்த்தி, மாநகர திமுக செயலாளர்கள் தளபதி, பொன்முத்துராமலிங்கம் ஆகியோரும் உள்ளனர் என்பதால், மதுரை மேயர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.