

விருதுநகர்: சாத்தூர் நகர்மன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தனது மனைவி தோற்றதால் மனமுடைந்த அவரது கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
சாத்தூர் நகராட்சியில் துப்பரவுப் பணி மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருபவர் நாகராஜன் (58). இவரது மனைவி சுகுணாதேவி. சாத்தூர் நகர்மன்றத் தேர்தலில் 19-வது வார்டில் அதிமுக சார்பில் சுகுணாதேவி போட்டியிட்டு, 215 வாக்குகள் மட்டுமே பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுபிதா 595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனால் மனவேதனை அடைந்த நாகராஜன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிசைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாகராஜன் தீவிர சிகிச்சைபெற்று வருகிறார்.
இம்மாதம் இறுதியில் நகராஜன் பணி ஓய்வுபெறும் நிலையில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் சாத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் நகராட்சியில் மொத்த 24 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 18 வார்டுகளில் வெற்றி பெற்று சாத்தூர் நகராட்சியை கைப்பற்றியது. திமுகவைத் தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான மதிமுக 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றன. அதிமுக, அமமுக மற்றும் சுயேச்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.