

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதிலிருந்து இதுவரை (பகல் 12 மணி) எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்க, சிவகாசி மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் அதிமுக, திமுக தலா 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பாஜக தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் 4 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சியில் பாஜக தனது கணக்கைத் தொடங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மாநகராட்சிகளைப் பொறுத்தவரை இதுவரை மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி முன்னிலையில் இடம்பெறவில்லை.
வேலூர் மாநகராட்சி 37-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அங்குள்ள 60 வார்டுகளில் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளன. பாஜக ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.
நகராட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் நடைபெற்ற 138 நகராட்சிகளில் 136 நகராட்சிகளுக்கான முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவிட்டன. இவற்றில் 123 நகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கின்றன. 8 நகராட்சிகளில் அதிமுக முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக, விருதுநகர் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 20 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்று, விருதுநகர் நகராட்சியை திமுக கூட்டணி கைபற்றியுள்ளது.
489 பேரூராட்சிகளளுக்கான தேர்தலில் பெரும்பாலான பேரூராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 338 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. திருச்சியில் இரண்டு பேரூராட்சிகளில் ஐஜேகே கட்சி வெற்றி பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள 11 பேரூராட்சிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த பேரூராட்சி புதிதாக 2020ல் தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.