இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்; வன்முறையில் ஈடுபட்டால் உடனடி கைது: காவல் துறை எச்சரிக்கை

படம்: வி.எம்.மணிநாதன்.
படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை கேட்டு வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள், முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் தனியாக அடையாள அட்டை வழங்கியுள்ளது. பாதுகாப்புக்கு நிற்கும்போலீஸாரிடம் இதை காண்பித்து,வாக்கு எண்ணும் மையத்துக்குள்சென்று பார்வையிடலாம். உள்ளே செல்லும் முகவர், வெளியே வந்தால் மீண்டும் உள்ளே செல்லஅனுமதி கிடையாது. மையத்துக் குள் செல்போன், பேனா, வாட்டர் பாட்டில், சாப்பாடு உட்பட எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

தேவையில்லாமல் பிரச்சினை செய்யும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளை கேட்டு அரசியல் கட்சியினர் உட்பட யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் துறை அதிகாரிகள் நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in