ஒற்றை மொழியின் ஆதிக்கம் இல்லாமல் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண உறுதியேற்போம்: ஸ்டாலின் வேண்டுகோள்

ஒற்றை மொழியின் ஆதிக்கம் இல்லாமல் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண உறுதியேற்போம்: ஸ்டாலின் வேண்டுகோள்

Published on

சென்னை: ஒற்றை மொழியின் ஆதிக்கம் இல்லாமல், அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும், அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று உலகத் தாய்மொழி நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகத் தாய்மொழி நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தில் இருந்துபெறும் உணர்வெழுச்சி கொண்டு,ஒற்றை மொழியின் ஆதிக்கம் இல்லாமல், அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும், அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: வங்கமொழி பேசும் மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்டதற்கு எதிராகப் போராடிய 5 மாணவர்கள் 21.2.1952-ம் நாள் படுகொலைசெய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவை அன்றைய தினத்தை தாய்மொழி நாளாகக் கடைபிடிக்கிறது. தாய்மொழியைக் காக்க விரும்புவோர் செய்ய வேண்டிய முதல் பணி, தாய்மொழிவழிக் கல்வியை காப்பதுதான். மொழிப்போர் நடத்திய தமிழகத்தில் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை இல்லை என்பது தலைகுனிய வேண்டியதாகும். தமிழ் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான தாகும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழ் மொழியே உலகின் முதல்மொழியென உலக மொழியியல்பேரறிஞர்கள் ஏற்று கொண்டாடுகிறார்கள். தமிழரே உலகின் முதல் மாந்தனென ஆய்வறிஞர்கள் உரைக்கிறார்கள். உலகிலுள்ள எல்லா இனத்தவர்களும் தங்களதுதாய்மொழியில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழர்களாகிய நாம், மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகிய தமிழில் பேசிக் கொண்டிருக்கிறோம் எனும் பெருமிதத்தோடு நிற்கிறோம். உலகத் தாய்மொழி நாளில், தமிழ்த்தாயின் பிள்ளைகளின் உளப்பூர்வமான வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

கருத்தரங்கம், கவியரங்கம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று உலகத் தாய்மொழி தினம்கொண்டாடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ப.அன்புச்செழியன் வரவேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன் தலைமை உரையாற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

அதையடுத்து பேராசிரியர் வ.ஜெயதேவன் தலைமையில் ‘தாய்மொழி நாள்: சில பதிவுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், உலகநாயகி பழனி, மாநிலக் கல்லூரி முதல்வர் இரா.ராமன் உள்ளிட்டோர் பேசினர். ‘இதனாலே பேணலாம் தாய்மொழியை’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் பால.சீனிவாசன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. நிறைவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.சி.தியாகராசன் நன்றி கூறினார்.

பிரதமர் மோடி வாழ்த்து

உலக தாய்மொழி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன். தாய்மொழிக்காக போராடியவர்களின் தியாகங்களையும் நினைவு கூர்ந்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "தாய்மொழி வழி கல்விக்கும் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பல மாநிலங்களில் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக்கல்வி அளிப்பது தொடங்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in