Published : 22 Feb 2022 05:29 AM
Last Updated : 22 Feb 2022 05:29 AM

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை பிடிக்கப் போவது யார்? - தமிழகத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு தமிழகம் முழுவதும் 268 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 268 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்புப் பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு என்பதால் ஒரு மணி நேரத்திலேயே வேட்பாளர்களின் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். காலை 10 மணி முதல் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார், காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ஆணையர் வெ.பழனிகுமார் பேசியதாவது: வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும். மையங்களில் கரோனா பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக் கும், அலுவலர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் போலீஸாரை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மையங்களுக்கு தடையில்லா மின்சார வசதி, கணினி வசதிகளையும், பணியாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் போதிய ஒளி, ஒலி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அந்த அறையில் பாதுகாப்பு தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் தேவையான எண்ணிக்கையில் கணினி மற்றும் இணையவசதிகளை ஏற்படுத்த வேண்டும். வாக்கு எண்ணும் அறைகளுக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் கைபேசிகளை கொண்டுவர அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பேரூராட்சிகள் ஆணையர் இரா.செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஏடிஜிபி (தலைமையிடம்) ஜி.வெங்கட்ராமன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேவையற்ற மோதல்களை தவிர்க்க, வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள 268 இடங்களைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் செயல்படும் அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை இன்று முழுவதும் மூட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்று முடிவடையும் நிலையில், தேர்தல் நடவடிக்கைகள் 24-ம் தேதி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகள் மார்ச் 2-ம் தேதி நடக்கிறது. மறைமுகத் தேர்தல் மூலம் மாநகராட்சி களுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் மார்ச் 4-ம் தேதி நடக்க உள்ளது. மறைமுகத் தேர்தலில் மொத்தம் 1,296 பதவிகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x