Published : 22 Feb 2022 05:38 AM
Last Updated : 22 Feb 2022 05:38 AM

பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளிக்கு நேற்று வந்த சிபிஐ அதிகாரிகள்.

தஞ்சாவூர்: பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட் டம் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

அரியலுார் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். இவர், விடுதி யில் தங்கியிருந்தபோது ஜன.9-ம் தேதி விஷம் குடித்ததால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜன.19-ம் தேதி இறந்தார்.

விடுதி வார்டன் சகாயமேரி விடுதியில் அறையை சுத் தம் செய்ய சொன்னதாகவும், வரவு செலவு கணக்குகளை எழுதச் சொல்லி திட்டியதாகவும் மாணவி அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருக்காட்டுப்பள்ளி போலீஸார் சகாயமேரியை கைது செய்தனர். தற்போது சகாயமேரி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதற்கிடையே ஜன.17-ம் தேதி, மாணவி சிகிச்சையில் இருந்தபோது, முத்துவேல் என்பவர் எடுத்த வீடியோவில், மதம் மாற பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக மாணவி கூறிய தகவல் வெளியானது. மேலும், பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால்தான், தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதி மன்றம், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பிப்.15-ம் தேதி, சென்னை சிபிஐ அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு துாண்டுதல் உட்பட 4 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையில், கண்காணிப்பாளர் நிர்மலாதேவி, டிஎஸ்பிகள் ரவி, சந்தோஷ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர், நேற்று மதியம் 12.20 மணிக்கு, மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளி மற்றும் விடுதிக்கு வந்தனர்.

அங்கு முதலில் திசைக்காட்டும் கருவியை கொண்டு பள்ளி வகுப்பறை மற்றும் விடுதியில் மாணவி தங்கியிருந்த அறை, ஆசிரியர்கள் தங்கும் அறை, கன்னியாஸ்திரி கள் தங்கும் அறை என அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும், இதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். மேலும், பள்ளி நிர்வாக பணியில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தி, அவற்றையும் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணை மாலை 5.50 மணி வரை நடைபெற்றது.

அதன்பின், திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு பள்ளியின் விடுதி சமையலர் கண்ணம்மாள், மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ஓய்வுபெற்ற செவிலியர் ஜெசிந்தா, பள்ளியின் புதிய வார்டன் காயத்ரி ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர், சிபிஐ அதிகாரிகள் திருச்சி புறப் பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x