Published : 22 Feb 2022 05:38 AM
Last Updated : 22 Feb 2022 05:38 AM

வாக்கு எண்ணிக்கையின்போது அமைதி வழியை கையாள வேண்டும் - வெற்றி கொண்டாட்டத்தை குறைத்துக் கொள்ளுங்கள்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை

மக்கள் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என்ற நம்பிக்கைஉள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது அமைதி வழியை கையாள வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்களை குறைத்து மக்கள் பணியை கூடுதலாக செய்ய வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடல்:

திமுக ஆட்சி அமைந்ததும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முழுமையாக நடத்தி முடித்துள்ளோம். 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம்தேதி ஒரேகட்டமாக அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. ஒருசிலவிரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருந்தாலும், அதுகுறித்து சட்டரீதியாக உரிய நடவடிக்கையும், தேவையான இடங்களில் மறுவாக்குப் பதிவும் நடந்துள்ளது.

எந்த வகையிலும் வாக்காளர்களுக்கு இடர்பாடு ஏற்படா வண்ணம் இந்த தேர்தலில் மொத்தமாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 9 மாதங்களில் நிறைவேற்றிய முக்கியமான சாதனைகளை மட்டும் முன்வைத்து திமுகவாக்கு கேட்டது. தமிழகத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கிய முந்தைய ஆட்சியாளர்களாலும், அவர்களின் மறைமுக கூட்டாளிகளாலும், இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தல் பரப்புரை என்ற போர்வையில், அவதூறுகளை அள்ளித் தெளித்தார்கள். எல்லாவற்றுக்கும் உரிய பதில்களுடன் திமுக பிரச்சாரம் செய்து ஆதரவை திரட்டியது.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும், துணைத் தலைவர் பன்னீர்செல்வமும் அவர்களுக்குள் நடக்கும் பதவிப் போட்டியில் என் மீது பாய்ந்து கொண்டிருந்தனர். முதல்வர் என்ற பொறுப்பில் உள்ள நான், மக்களின் துயரத்தில் உற்ற துணையாக நிற்பதுடன், ஆதரவுக்கரம் நீட்டுகிறேன். அதே நேரம், மக்கள் பெருங்கூட்டமாக திரண்டு வந்து, கரோனா பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்று காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டேன்.

வாக்கு சேகரிக்கும்போதே திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் களம் அமைந்ததால், எதிர்க்கட்சியினர் தங்களின் படுதோல்வியை மறைக்கஅவதூறுகளை பரப்பினர்.

திமுகவினர் அத்துமீறினாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல இடங்களில் எதிர்க்கட்சியினர் எல்லை மீறியது பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் வெளியாகின. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, திமுக நிர்வாகியின் சட்டையை கழற்றி அவமானப்படுத்தியுள்ளார். திமுக இதை சட்டரீதியாக எதிர்கொள்ளும்.

மக்கள் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும், அதுமுறைப்படி அறிவிக்கப்படும் வரைகாத்திருப்பது நம் கடமை.

பிப்.22-ம் தேதி (இன்று) வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடியும் வரை திமுக முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து வாக்குகளும் முழுமையாக எண்ணப்பட்டு, முறைப்படி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதா என்பதைஉறுதி செய்ய வேண்டும். வாக்குஎண்ணிக்கை மையங்களில் அதிமுகவினர் எந்த அளவுக்கு எல்லை மீறுவார்கள் என அறிந்தவன் நான். அதே வழியை அவர்கள் இப்போது கையாண்டாலும் நாம் அமைதியாக இருக்க வேண்டும்.

கடைசி கிராமம் வரை, கடைசி வீடு வரை அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டியவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்தான். வெற்றிக் கொண்டாட்டங்களை குறைத்து, மக்கள் பணியை கூடுதலாக செய்ய வேண்டியது கட்டாயம். மாநகராட்சிகளுக்கான மேயர்,துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் மார்ச் 4-ம்தேதி நடக்கும் மறைமுகத் தேர்தலில் தேர்வாக உள்ளனர். மறைமுக தேர்தலாக இருந்தாலும் நாம்வெளிப்படையாக இருக்க வேண்டும். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்படுவோருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதில் சிறு பாதிப்பும் இருக்கக் கூடாது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x