Published : 22 Feb 2022 05:43 AM
Last Updated : 22 Feb 2022 05:43 AM

தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரம்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொழில், வணிக பிரதிநிதிகளுடன் ஆலோசன

சென்னை

தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொழில், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் பட்ஜெட் கடந்த பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக தமிழக பட்ஜெட் மார்ச் மாதத்தில் தாக்கல்செய்யப்பட உள்ளது.

2 கட்ட ஆலோசனை

இதையொட்டி, பல்வேறு துறைசார்ந்த அறிவிப்புகள் இடம்பெறுவது தொடர்பாக, தொழில் மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த நிறுவனங்களின் கோரிக்கைகள், கருத்துகளை கேட்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று 2 கட்டமாக நடைபெற்றது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதித் துறை செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் ச.கிருஷ்ணன், சிறு, குறு நடுத்தரதொழில் துறை செயலர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனமேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொழில் சலுகைகள்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையினருக்கான கூட்டம்காலையில் நடந்தது. இதில், தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் தவிர தேவைப்படும் அரசு சார்ந்தஉதவிகள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி பாதிப்பு

வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பிற்பகலில் நடந்தது. இதில், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தகம், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மளிகைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதர துறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.

இதற்கிடையில், பட்ஜெட் தயாரிப்பு பணியில் நிதித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அதற்கேற்ற அறிவிப்புகள், திட்டங்களுடன் தமிழக பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது.பட்ஜெட் தாக்கலுடன் சேர்த்து துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும் என்பதால், அதற்கான தயாரிப்புகளில் அந்தந்த துறைகளின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x