

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் வேட்புமனுவை எடுத்துவர மறந்து, மனு தாக்கலுக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் அலுவலகமான, திருநெல்வேலி மாநகராட்சிக்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு திமுக கூட்டணி கட்சியினருடன் மைதீன்கான் வந்தார். வேட்புமனுவை பரிசீலிக்கும் அதிகாரிகள் குழு முன் அமர்ந்தார்.
வேட்பு மனு எங்கே? என்று உடன்வந்தவர்களிடம் கேட்டார். எவரிடமும் வேட்புமனு இல்லை. வேட்புமனுவை வேட்பாளர் எடுத்து வரவில்லை என்பதால் கட்சி நிர்வாகிகளும், அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உதவியாளர் மூலம் வேட்புமனுவை எடுத்து வரச் செய்து கடைசி நேரத்தில் அவசர அவசரமாக அதிகாரிகளிடம் அளித்தார் மைதீன்கான்.
வேட்புமனுவுடன் சொத்து, வழக்கு, குடும்பம் போன்ற விவரங்கள் அடங்கிய எந்த ஆவணங்களும் இணைக்கப் படவில்லை.
இதனால், உரிய ஆவணங்களை வரும் 29-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அளிக்குமாறு தேர்தல் ஆணைய கடிதம் ஒன்றை, தேர்தல் அதிகாரிகள் மைதீன்கானிடம் அளித்தனர்.
இத்தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள மைதீன்கான், அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.
போலீஸாருடன் வாக்குவாதம்
முன்னதாக அவருடன் காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் மில்லத் இஸ்மாயில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் முகமதுஅலி, மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் ஆகியோரை மட்டுமே அலுவலகத்தினுள் போலீஸார் அனுமதித்தனர்.
அப்போது அலுவலகத்தினுள் செல்ல முயன்ற மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம்நாத்துக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்பாளருடன் 4 பேர் தவிர மற்றவர்கள் செல்லக்கூடாது என்று உறுதிபட தெரிவித்த போலீஸார், மற்றவர்களை அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர்.
வெற்றிபெறுவேன்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, `பாளையங்கோட்டை தொகுதியில் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் போட்டியிடுவதாக நினைத்து தொண்டர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நான் வெற்றிபெற தொண்டர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள்’ என்றார்.
கட்சியினர் மத்தியில் அவருக்கு இருக்கும் எதிர்ப்பு குறித்த கேட்டபோது, “இது உள்கட்சி விவகாரம். தொண்டர்கள் மத்தியில் பல்வேறு உணர்வுகள் இருக்கலாம். ஆனால் கட்சி தலைமை என்னைத்தான் இத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது” என்று பதிலளித்தார்.