Published : 22 Feb 2022 05:45 AM
Last Updated : 22 Feb 2022 05:45 AM
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 5-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
விழாவில் அவர் பேசியபோது, ‘‘நாம் வணிகம் செய்ய வரவில்லை. தமிழகத்தை சீரமைக்க வந்திருக்கிறோம். அதிமுகவிலும், திமுகவிலும் சஞ்சலப்பட்டுபோய் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வாருங்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்குங்கள்’’ என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‘‘தேர்தலில் நேர்மைக்கு இடம் இல்லாமல் எல்லா இடத்திலும் பணம் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளதால்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தேர்தலில் அராஜகம் தலைவிரித்தாடியதற்கான சான்றுகள் கண்கூடாக இருக்கின்றன’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், சென்னைதலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் இறையன்புவை சந்தித்து கமல்ஹாசன் மனு அளித்தார். அதில் கிராமசபைக் கூட்டங்கள் போல, நகரசபைக் கூட்டங்களையும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT