தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை: படகுகளை அரசுடமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சங்கிலி மற்றும் கைவிலங்கிடப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட தமிழக மீனவர்கள்.
சங்கிலி மற்றும் கைவிலங்கிடப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட தமிழக மீனவர்கள்.
Updated on
1 min read

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை நாட்டுடமையாக்கியும் பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்களும், காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்களும் கடந்த ஜனவரி 31 அன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடித்ததாக 2 விசைப்படகுகளையும் கைப்பற்றி, அதில் இருந்த 21 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

மீனவர்கள் மீதான வழக்கு நேற்று 2-வது முறையாக பருத்தித் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனால் மீனவர்கள் 21 பேரையும் யாழ்ப்பாணம் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு இரும்பு சங்கிலி மற்றும் கைவிலங்கிட்டு அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன் மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 21 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின்கீழ் அரசுடமையாக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். படகுகளுடன் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக மீனவர்களுக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 12 பேரும், நம்புதாளை நாட்டுப்படகு மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in