

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுகவினர் இருவரை திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி மையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திமுகவினர் சேதப்படுத்தினர்.
இந்நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர்கள் கதிரவன், செல்வக்குமார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவு நாளன்று தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக வட்ட செயலாளர் ஒருவரை திருவான்மியூர் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதனை கண்டித்து திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் அருகே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த 2 இளம் பெண்களிடம் போராட்டக்காரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பெண்கள் துணிச்சலாக போராட்டக்காரர்களை எதிர் கொண்டனர்.
தொடர்ந்து போராட்டக்காரர்களின் தடுப்புகளை மீறி இரு பெண்களும் அங்கிருந்து சென்றனர். இந்த ‘வீடியோ’ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது திருவான்மியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.