

சென்னை: சென்னை கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற மூன்று அலங்கார ஊர்திகளை கண்டுகளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவியருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி, மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்திய விடுதலைப் போரில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட விடுதலைப் போரில் தமிழகம் என்ற 3 அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் கண்டுகளிப்பதற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே காட்சிப்படுத்தப்பட்டிருந்த அலங்கார ஊர்திகளை மயிலாப்பூர் பி.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளி திருவல்லிக்கேணி ரேக்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, இ.வி.இ.மெட்ரிகுலேசன் பள்ளி, என்.கே.டி. தேசிய ஆண்கள் பள்ளி, ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவியர் நேற்று கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து செல்லும் வழியில், தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி அங்கிருந்த மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.
அத்துடன் அலங்கார ஊர்திகள் முன்பு மாணவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும் அலங்கார ஊர்திகளை காண வந்த பொதுமக்களுடனும் முதல்வர் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின்போது, "மாணவ, மாணவியர் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து, அரசு வகுத்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிக்குச் சென்று, நன்றாகப் படிக்க வேண்டும்" என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
"இந்த கலந்துரையாடல் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பற்றி அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது" என்று மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.