

வண்டலூர்: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்நேற்று முன்தினம் மாலை கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில்காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச்செயலாளரும், தமிழக குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மார்ச் 1-ம் தேதி காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம், நகரம், பேரூர்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் கொடி, தோரணங்கள் கட்டி, ஒலிபெருக்கி அமைத்து கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்குவது என்றும், மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு மதிய உணவு, உடைகளை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், மார்ச் மாதம் முழுவதும்நகரம், ஒன்றியம், பேரூர்வாரியாக தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துவது, அந்தக் கூட்டத்தில் ஏழை - எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, அதேபோல் மருத்துவ முகாம் மற்றும்மருத்துவ உதவிகளை செய்வது,இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட், கைப்பந்து,கால்பந்து, இறகுப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவது என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் நடைபெறும் ‘உங்களின் ஒருவன்’ என்ற வாழ்க்கை பயணம் புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா வரும் 28-ம் தேதி மாலை 5.00 நடைபெறுகிறது. அதில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.