

முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்ததாகக் கூறி, அவரது உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசும்போது, முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு திரண்ட அதிமுகவினர், இளங்கோவன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர். பின்னர், அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் திருவாரூர் பேருந்து நிலையத்தில் திரண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, மாவூர், நன்னிலம், பவித்திரமாணிக்கம் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று இளங்கோவனின் உருவபொம்மையை அதிமுகவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.