Published : 11 Apr 2016 06:08 PM
Last Updated : 11 Apr 2016 06:08 PM

திட்டங்களையும் நிறைவேற்றவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை: ஜெ. மீது கருணாநிதி சாடல்

தேர்தல் வாக்குறுதிகளையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சொன்ன திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கடித வடிவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழக மக்கள் நலனை முற்றாகப் புறக்கணித்து, எல்லாப் பிரச்சினைகளிலும் ஆணவம் - அலட்சியம் காட்டி, எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நடந்து, நிர்வாகத்தை நிர்மூலப்படுத்தி விட்டு, தற்போது அவருடைய தேர்தல் பிரச்சார முதல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைப் பற்றியெல்லாம் கேட்போர் வாய் பிளந்து கேட்கும் அளவுக்குப் பேசித் தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே! நீங்கள் சர்வ காலமும் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் வானத்திலிருந்து தயவுசெய்து சற்றுக் கீழே இறங்கி வாருங்கள்! நேரிடையாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நிதானமாகப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்!

இதோ, 10-4-2016 தேதிய “தி இந்து” தமிழ் நாளேட்டில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்! தலைப்பு - “இளைஞர் படுகொலை, விவசாயி தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள், தமிழக அரசுக்கு ஒரே மாதத்தில் 6 நோட்டீஸ் - மனித உரிமை ஆணையம் அனுப்பியது!”

இந்தத் தலைப்பில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆறு சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும், என்னென்ன சம்பவங்கள் என்றும் விரிவாகச் செய்தி வந்துள்ளது. மனித உரிமை ஆணையமே ஒரே மாதத்தில் இந்த அரசுக்கு ஆறு நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறது என்றால், அ.தி.மு.க. ஆட்சியின் கீர்த்தி எப்படிப்பட்டது என்பது விளங்குகிறதல்லவா? அ.தி.மு.க. அரசுக்கு நீதிமன்றங்கள் வழங்கியிருக்கும் நித்திய கண்டனங்கள் வேறு ஏராளமாகக் குவிந்திருக்கின்றன!

மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் ஆறு என்றால், உயர் நீதிமன்றம் இந்த அரசுக்கு அனுப்பிய நோட்டீஸ் எண்ணற்றவை! அத்துடன் அரசு உயர் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எத்தனை முறை அபராதம் விதித்திருக்கிறது என்ற பட்டியலைப் பார்த்தால், ஜெயலலிதாவின் ஆட்சித் திறமை பளிச்சென விளங்கும்!

ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றியும், நடவடிக்கைகள் பற்றியும் தமிழ்நாட்டு மக்கள் திருப்தி அடைவது கூட இருக்கட்டும்; அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் திருப்தியோடு இருக்கிறார்களா? ஏன், அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள், இருப்பவர்களில் எத்தனை பேர் அவருக்குப் பின்னால் என்னென்ன பேசுகிறார்கள்? பதவியிலே இருப்போர், தங்கள் பதவிப் பாதுகாப்புக்காக அவரைப் புகழ்ந்து கூறிக் குளிரச் செய்யலாமே தவிர, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஜெயலலிதாவை மனதாரப் பாராட்டுகிறார்களா?

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றி நாளிதழிலேயே செய்தி வந்திருக்கிறதே? ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கிலே தங்கள் பிள்ளைகளையும், குடும்பத்தையும் மறந்து அல்லும் பகலும் பாடுபட்ட வழக்கறிஞர்கள் பலர் என்ற போதிலும், அவர்களில் பலருக்கு இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட வில்லையாம்!

ஜெயலலிதா விடுதலை பெற்ற பிறகு, அந்த வழக்கறிஞர்களை யெல்லாம் அழைத்துப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்ததாகவும், அதைக்கூடச் செய்யவில்லை என்றும், ஆனால் சில காலம் மட்டும் அந்த வழக்கில் ஆஜரான நவனீத கிருஷ்ணன் போன்றவர்களுக்கு அட்வகேட்-ஜெனரல், டி.என்.பி.எஸ்.சி. தலைவர், ராஜ்யசபா எம்.பி., போன்ற பதவிகள் வழங்கப்பட்டதாகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

அந்தக் காலத்தில் “கீறல் விழுந்த எச்.எம்.வி. கிராமபோன் ரிகார்ட் மாதிரி சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறாயே” என்பார்கள்! அதைப்போல முதலமைச்சர் ஜெயலலிதா வாயே திறக்க மாட்டார். எப்போதாவது திறந்தால் வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமலே, “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக ஆகிவிட்டது, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என்று ஏற்கனவே பலமுறை சொன்னதை, திரும்பத் திரும்பச் சொல்லத் தவறுவதே இல்லை.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? இந்தக் கேள்விக்கு 10-4-2016 தேதிய நாளேடு ஒன்றில் பதில் உள்ளது. “அறிவிக்கப்படாத மின் வெட்டு, தூக்கம், தண்ணீரின்றி தவிப்பு” என்ற தலைப்பில் “அடையாறு, வேளச்சேரி சுற்று வட்டாரங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால், பகுதிவாசிகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தினமும், பகல், இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. சாலைப் பணி மற்றும் மின்மாற்றி அமைக்கும்போது ஏற்படும் கேபிள் பழுதால் மின் வெட்டு ஏற்படுவதாக, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், எந்தப் பணியும் நடக்காத இடத்தில்கூட, மின்வெட்டு உள்ளது” என்று செய்தி வெளியிட்டு, ஜெயலலிதாவின் பேச்சு எவ்வளவு தவறான தகவல் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

நாளேட்டில் வந்துள்ள தகவல், “பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதைப் போல, மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நாள்தோறும் நடக்கும் மின்வெட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டும்தான்!

2011ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே மக்களிடம் ஜெயலலிதா என்ன வாக்குறுதி கொடுத்தார் தெரியுமா? “மூன்றே மாதத்தில் மின் வெட்டை போக்குவேன்” என்று சொன்னார் ஜெயலலிதா. மூன்று மாதங்கள் அல்ல; முப்பது மாதங்கள் அல்ல; அறுபது மாதங்கள் ஓடிவிட்டன. மின்வெட்டு போகவும் இல்லை; சாகவும் இல்லை. இந்த ஐந்து வருடத்தில் மின்வெட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். சிறு மற்றும் குறுந் தொழில்கள் பாதிக்கப்பட்டன. பெரிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொழில் தொடங்கவே வராமல் அஞ்சி அலறி ஓடின.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, கோவை பகுதியில் உள்ள சிறு மற்றும் குறுந் தொழில்கள் மிக மோசமாக நலிவடைந்து, தொழிற்பேட்டைகளில் இருந்த தொழில் நிறுவனங்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டதை ஜெயலலிதா நேற்றைய தினம் மறந்து விட்டுப் பேசியிருக்கிறார். மறந்து விட்டுப் பேசினாரா? அல்லது வேண்டுமென்றே உண்மையை மறைத்து விட்டுப் பேசினாரா?

இன்றைய (11-4-2016) அதே நாளேடு இரண்டாம் பக்கத்திலேயே - “விசாரணை வளையத்தில் தமிழ்நாடு மின் வாரியம் - நிலக்கரி இறக்குமதியில் கறுப்புப் பணம் பதுக்கல்” என்ற தலைப்பில் அரைப் பக்கத்திற்கு செய்தி வெளியிட் டுள்ளது. முதல் அமைச்சர் இப்படிப்பட்ட செய்திகளைப் படித்தாலே அவருக்கு எழுதிக் கொடுப்பதெல்லாம் எவ்வளவு உண்மைக்கு மாறான தகவல்கள் என்பதை அவராலேயே புரிந்து கொள்ள முடியும்.

ஜெயலலிதா தனது பேச்சின் துவக்கத்திலேயே 2011ஆம் ஆண்டு, அவர் வெளியிட்ட அ.தி.மு.க.வின் சார்பிலான தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறியிருக்கிறார்.

2011ஆம் ஆண்டு அவர் வைத்த அ.தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் சிலவற்றை மட்டும் இங்கே நினைவுப்படுத்துகிறேன்.

அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் 4 வருடத்திற்குள் மும்முனை மின்சார இணைப்பு வழங்கி, மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழி காணப்படும்.

மின் திருட்டைத் தடுக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் “மின்சாரப் பாதுகாப்புப் படை” அமைக்கப்படும்

2012-க்குள் (இரு வருடங்களுக்குள்) 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

2013-க்குள் பத்து 300 மெகாவாட் “சோலார் எனர்ஜி பார்க்” உருவாக்கப்பட்டு 3000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.

காற்றாலை மின்சாரம் 30 சதவீதமாகவும், அணு சக்தி மின்சாரம் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

160 கிராமப் பஞ்சாயத்துகளில் 200 கிலோ வாட் உயிரிதிரல் (பையோ கேஸ்) இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை. இதனால் கிராமப்புறங்களில் 64000 பேருக்கு வேலை வாய்ப்பு.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம்.

கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை.

மின்சாரம் பற்றி மட்டும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் இவை.

இந்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் காற்றில் வேகமாகப் பறக்க விட்டுவிட்டு, ஐந்தாண்டு காலமாக “மின் மிகை மாநிலம்” “மின்வெட்டு நீக்கம்” என்ற பொய்யை; திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். இந்த மந்திரத்தால் மாங்காய் விழுந்து விடுமா?

“தேர்தல் அறிக்கையில் கூறியதையெல்லாம் நிறைவேற்றி விட்டோம்” என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சார முதல் கூட்டத்தில் முழங்கியதை விட, இன்னும் குரலை உயர்த்தி, சட்டப்பேரவையில் “2011 சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, அதற்கு மேலும் தமிழக மக்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்” என்று முழங்கினார்.

இதற்கு தி.மு. கழகத்தின் சார்பில் அல்ல, 7-2-2016 தமிழ் வார இதழில், “5 ஆண்டு கால ஆட்சி.....தேர்தல் வாக்குறுதிகள்..... நிறைவேற்றி விட்டாரா முதல்வர்?” என்ற தலைப்பிலேயே மூன்று பக்கங்களுக்கு கட்டுரை வெளியாகியிருந்தது

அதில் “புஸ்வாண வாக்குறுதிகள்” என்ற தலைப்பில், “சென்னை டு கன்னியாகுமரி கடலோர சாலைத் திட்டம் - தென் தமிழகத்தில் “ஏரோ பார்க்” - ஆன்லைன் வர்த்தகம் தடுக்கப்படும் - திருப்பூர் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞானக் கழிவு அகற்றும் நிலையம் - 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் - மின்னணு ஆளுமையின் கீழ் அனைத்துக் காவல் நிலையங்கள் - விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண் டலங்கள் - பள்ளிகளில் தாய்மொழியோடு பிறமொழிகள் பயில சிறப்புப் பயிற்சிகள் - நீதிமன்றங்களில் தமிழ் மொழி - தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை - வன விலங்குகள் குடியிருப்பு - விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை - தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்கு வோம் - மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்” என்று பெட்டிச் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக அந்த கட்டுரையின் துவக்கத்தில், “அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக ஜெயலலிதா சொன்னது, வெற்று வீர வசனம் மட்டுமே. 90 சதவிகித வாக்குறுதிகள் பஞ்சராகிப் போயின. தேர்தல் காலத்தில் கொளுத்திப் போட்ட கலர் மத்தாப்புகள் புஸ்வாணமாகி விட்டன” என்றும் எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்த ஒருசில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாசகங்களை அப்படியே கூறிவிட்டு, அதன் கதி என்ன என்பதையும் அந்த இதழ் எழுதியிருந்தது.

“இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம். இதற்காகச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்” என தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள். அந்தச் சிறப்பு திட்டம் எப்போது வரும் என்பது ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். “4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சாரம், மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரின் மின்சாரப் பாதுகாப்புப் படை, மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்படும்” என்கிற வாக்குறுதிகள் எல்லாம் கிழிந்து தொங்குகின்றன.

“கேபிள் டி.வி. அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்” என்றார்கள். மாதம் 70 ரூபாய் கட்டணத்தில் கேபிள் டி.வி. என நிறைவேற்றினார்கள். ஆனால், 70 ரூபாய் கட்டணம் எங்கே வசூலிக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. “மீனவர் பாதுகாப்புப்படை, 13 குளிர் சாதன மீன் பூங்காக்கள், நடுக்கடல் மீன் பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக் கப்பல் பூங்கா எல்லாம் எப்போது வரும் என்பதை “மக்களால் நான். . . மக்களுக்காக நான்” எனச் சொல்லும் ஜெயலலிதாதான் சொல்ல வேண்டும்.

“தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளிலும் ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், கட்டுமானம், கப்பல் கட்டும் துறைகள் ஊக்கு விக்கப்பட்டு செயல்படுத்தப்படும்; கப்பல் கட்டுமானத் துறையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்க நடவடிக்கைகள்; நிலம் கொடுக்கும் விவசாயிகளை பங்குதாரர்களாக மாற்றிச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்” எனத் தொழில் துறைக்குத் தரப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயின?

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை முதலில் ஆதரித்து பிறகு ஜகா வாங்கியது, முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆட்சியின் அந்திமக் காலத்தில் நடத்தியது, இவை எல்லாமே தொழில் துறையின் மீது காட்டிய அக்கறைக்கு சாம்பிள்கள்.

தயவுதாட்சண்யம் இல்லாமல் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றார்கள். 5 ஆண்டுகளில் 9,948 கொலைகளும், ஒரு இலட்சம் கொள்ளைகளும் நடந் திருப்பது, சட்டம் ஒழுங்குக்குக் கிடைத்த நற்சான்றிதழ்.

அமைச்சர் செல்லூர் ராஜு அலுவலகத்தில் குண்டு வீச்சு, ராமஜெயம் கொலை வழக்கு, தர்மபுரி, விழுப்புரம் சாதி வன்முறைகள், பரமக்குடி துப்பாக்கிச் சூடு என சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்தது.

“திரைப்படத் துறையினர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என்பதும் ஒரு வாக்குறுதி. விஸ்வரூபம், துப்பாக்கி, தலைவா ஆகிய படங்கள் தியேட்டரை எட்டிப் பார்ப்பதற்கு தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தானே தட்ட வேண்டியிருந்தது. தரமான படங்களுக்கு மானியம், சின்னத்திரை விருதுகள், அண்ணா, எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், சிவாஜி பெயர்களில் வழங்கப்படும் கலைத் துறை வித்தகர்கள் விருதுகளையும் மூட்டை கட்டி வைத்தார்கள்.”

இப்படி அந்த இதழின் கட்டுரை மேலும் பல விபரங்களுடன் நீண்டு கொண்டே போகிறது. இந்த அழகில்தான் முதலமைச்சர் ஜெயலலிதா தனது முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாக முழங்கியிருக்கிறார்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்த சில திட்டங்களைப் பற்றிய பட்டியலைத்தான், அதுவும் ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழுதியவற்றையெல்லாம் தேடியெடுத்து இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த இதழைப் படித்திருந்தால், தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தக் கருத்தைப் பேசியிருக்க மாட்டார்; பொய்களைச் சொல்லத் துணிந்திருக்க மாட்டார்!

தேர்தல் அறிக்கையிலே அறிவித்த 54 திட்டங்களையும் நிறைவேற்றி விட்டதாக சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முழங்கிய ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டு காலத்தில் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் 1 இலட்சத்து 72 ஆயிரத்து 196 ரூபாய் மதிப்புள்ள 187 அறிவிப்புகளை பலத்த வரவேற்போடு அறிவித்தாரே, அந்த அறிவிப்புகளில் எத்தனை அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கிறார் என்பது பற்றி வாயே திறக்கவில்லையே ஏன்?

அதைப் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் சார்பில் பல முறை கேட்டும் அரசு அதற்குத் தயாராக வில்லையே ஏன்? ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையிலே சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை; சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் சொன்ன திட்டங்களையும் நிறைவேற்றவில்லை; நிறைவேற்றாததைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.

ஜெயலலிதா, சொன்னது எதையும் செய்வதற்காகச் சொல்வதில்லை என்பதைத் தமிழக மக்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் ஜெயலலிதா, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதை விட்டு விட்டு, உண்மை ஏதாவது கைவசம் இருந்தால், அதைப்பற்றிப் பேசட்டும்! இல்லாவிட்டால் “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே” என்றுதான் பாடத் தோன்றும்.

இவ்வாறு அந்த கடித வடிவ அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x