Published : 22 Feb 2022 06:40 AM
Last Updated : 22 Feb 2022 06:40 AM

இரு மொழிக் கொள்கையில் முதல்வர் உறுதி: மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா கருத்து

தஞ்சாவூர்

இருமொழிக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக கடைபிடித்து வருகிறார் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று உலக தாய்மொழி நாள் விழா, துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், பதிவாளர் (பொறுப்பு) ரெ.நீலகண்டன், மொழிப்புல முதன்மையர் இரா.காமராசு ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா பேசியது:

வங்கதேசத்தில் தாய்மொழியான வங்காள மொழிக்காகக் கிளர்ச்சி ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் 1952-ம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் ஐ.நா. சபைக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, 1999 -ம் ஆண்டில் ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி உலகம் முழுவதும் தாய்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என யுனெஸ்கோ மூலம் அறிவிக்கப்பட்டது.

உலக அளவில் கிரேக்க மொழி அழிந்துவிட்டது. விவிலியம் எழுதப்பட்ட ஹீப்ரு மொழி, இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மாண்டலின் என்கிற சீன மொழி மெல்ல, மெல்ல சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறது. இதேபோல, சமஸ்கிருதம் மக்கள் மொழியாக மாறவில்லை.

ஆனால், மக்களுக்காகவும், இறைவனுக்காகவும், இலக்கியத்துக்காகவும், தொழில்நுட்பத்துக்கு ஏற்றதாகவும், காலங்களை வென்றதாகவும் நம் தாய்மொழி தமிழ் மட்டுமே இருக்கிறது. நம் மொழியைக் காக்கத் தானமாக ஏராளமானோர் தங்களது உயிரைக் கொடுத்தனர்.

இவர்களுக்காக ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி நினைவுகூர்ந்து, வீரவணக்கம் செலுத்திப் போற்றுகிறோம்.

இந்தி மொழி நமக்கு எதிரி அல்ல. நம்மை ஆதிக்கம் செலுத்த வருகிற மொழி இந்தி என்ற காரணத்தால், அதை எதிர்க்கிறோம். இந்திக்கு எதிராக 1937, 1948 -ம் ஆண்டுகளைத் தொடர்ந்து பலமுறை நடைபெற்ற போராட்டம் 1965 -ம் ஆண்டில் உச்சத்தை அடைந்தது.

நம் நாடு சுதந்திரமடைந்தபோது, நம்முடைய ஆட்சி மொழி ஆங்கிலமாகத்தான் இருந்தது. ஆனால், அரசியல் சட்டத்தில் இனிமேல் இந்தியாவின் ஆட்சி மொழி இந்திதான் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தமிழகத் தலைவர்கள் மட்டுமே. இதன் விளைவாக 1962-ம் ஆண்டில் ஆட்சி மொழித் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அண்ணாவின் முயற்சியால் ஆங்கிலம் இணைப்பு ஆட்சி மொழியாகத் தொடர்கிறது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இந்த இரு மொழிக் கொள்கையை நம்முடைய முதல்வர் ஸ்டாலின் உறுதியாகக் கடைபிடித்து வருகிறார் என்றார்.

பின்னர், அவர் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவர் பெ.இளையாப்பிள்ளை வரவேற்றார். மொழியியல் துறை உதவிப் பேராசிரியர் கி.பெருமாள் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x