

திருப்பத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் 28-ம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அதன்பிறகு, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார். நீதிமன்ற உத்தரவுபடி தினசரி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி அவர் கையெழுத்திட்டு வந்தார். பின்னர், பேரறிவாளன் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவ்வப்போது வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று அவர் மருத்துவப் பரிசோதனை எடுத்து வந்தார்.
30 நாட்கள் கடந்து சிறைக்கு திரும்ப இருந்த பேரறிவாளனுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் 28-ம் தேதி பரோல் காலம் முடிவுற்று சிறைக்கு திரும்ப இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாதம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.