

மதுரை: மதுரை மாநகராட்சியில் 3 வார்டுகளில் மறு வாக்குப்பதிவு கோரி பாஜக வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் 57, 58, 98-வது வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிட்ட மலர்விழி, தீபா, பிரியா ஆகியோர் வழக்கறிஞர்கள் கௌரிசங்கர், முத்துக்குமார் ஆகியோர் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் இன்று தாக்கல் செய்த மனுக்களில், "மாநகராட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட வார்டுகளில் ஆளும் கட்சியினர் அதிகளவில் முறைகேட்டில் ஈடுபட்டனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. ஆளும்கட்சியினர் வாக்குச்சாவடிக்குள் உள்ளேயே வெளிப்படையாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணிக்கு மேல் கரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், காரோனா நோயாளிகள் யாரும் வாக்களிக்க வரவில்லை. அந்த நேரத்தில் ஆளும் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கள்ள ஓட்டுப் பதிவை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், எங்கள் வார்டுகளில் மறு வாக்குப்பதிவு கோரி ஆட்சியரிடம் மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் வார்டுகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும்." என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.