

சென்னை: ”நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் முறைகேடுகளை கட்சிகள் சுட்டிக்காட்டியும் உரிய நடவடிக்கை இல்லை” என்று தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி, சென்னை மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற பல பூத்களில் காவல் துறை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி தமாகா, அதிமுக, பாஜக மநீம, நிர்வாகிகளும், பொதுமக்களும் எவ்வளவோ சுட்டிக் காட்டியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. உதாரணத்திற்கு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 167-வது வார்டில் பதிவான வாக்குகளின் புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி தேர்தல் நடத்திய அதிகாரிகள் பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்.
நேற்று தேர்தல் முடிந்தவுடன் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 23C-ன் படி பதிவான மொத்த வாக்குகள்... 23 வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து 9790 வாக்குகள் மட்டுமே. இதற்கான 23C படிவங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்பாளர்களுக்கு வழங்கி உள்ளார்கள். ஆனால் இன்று பத்திரிகைகளில் 11233 வாக்குகள் பதிவானதாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.
கண்காணிப்பு கேமரா மூலம் வாக்கு எண்ணிக்கை: இதில் பிர்லியண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குச் சாவடியில் (வாக்குச்சாவடி எண் 4679) 100% வாக்குகள் பதிவானதாகவும் மற்றும் மாடர்ன் சீனியர் செகண்டரி ஸ்கூல் வாக்குச்சாவடியில் 100% வாக்குகள் பதிவானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதில் எங்கு தவறு நடந்தது என்பதை சரி செய்து தவறு செய்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என்று தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று யுவராஜா கூறியுள்ளார்.