

மதுரை: வங்கியில் ரூ.72.94 லட்சம் நிதி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி வங்கி மேலாளர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கனரா வங்கி மேலாளர் மணிமாறன். இவருக்கு வங்கிக்கு ரூ.72.94 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் 25.1.2022-ல் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மணிமாறன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், ''மனுதாரர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதை மேல்முறையீட்டு அலுவலர் உறுதி செய்துள்ளார். அதன் பிறகு மறுசீராய்வு அலுவலராக இருக்கும் வங்கியின் தலைமை பொதுமேலாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவ்வாறு நோட்டீஸ் அனுப்ப மறுசீராய்வு அலுவலருக்கு அதிகாரம் இல்லை'' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''வங்கி ஊழியர்கள் விதிப்படி புதிய ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லாத நிலையில் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மறுசீராய்வு அலுவலருக்கு அதிகாரம் கிடையாது. இருப்பினும் இந்த வழக்கில் மறுசீராய்வு அலுவலர் அனுப்பிய நோட்டீஸில், மனுதாரர் வங்கிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது, அது மனுதாரரின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை அலுவலர் சொல்லாததை மறுசீராய்வு அலுவலர் நோட்டீஸில் கூறியுள்ளார். இதனால் அவரது நோட்டீஸை ரத்து செய்ய வேண்டியதில்லை. மனுதாரர் தன் தரப்பு விளக்கங்களையும், ஆவணங்களையும் அளிக்கலாம். அதன் அடிப்படையில் மறுசீராய்வு அலுவலர் விரைவில் முடிவெடுக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.