

திருவண்ணாமலை: திருவண்ணாமலை 25-வது வார்டில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவில், தனது வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டதாக கூறிய சாதுக்கு, டெண்டர் வாக்கு முறையில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (74). இவர், திருவண்ணாமலை கிரிவல பாதையில் அக்னி குளம் குறுக்கு தெருவில், கடந்த 15 ஆண்டுகளாக, சாதுக்களுடன் வசித்து வருகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் மூலம் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இவரது பெயர், திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று (21-ம் தேதி) நடைபெற்ற மறு வாக்குப்பதிவில் வாக்களிக்க சென்றார். வரிசையில் காத்திருந்த அவர், வாக்குச்சாவடி உள்ளே (வாக்குச்சாவடி எண் – 57 – ஆண்கள்) சென்றார். அப்போது பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள், அவரது வாக்கு ஏற்கெனவே போடப்பட்டுவிட்டதாக தெரிவித்து வெளியேற்றினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ‘சாது’ கோவிந்தராஜ், வாக்குச்சாவடி எதிரே நின்றிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜ காளியப்பன் ஆகியோரிடம் முறையிட்டார். அப்போது அவர், “கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், நான் வாக்களித்தேன். தற்போது எனது வாக்கு செலுத்தப்பட்டுவிட்டதாக கூறுகின்றனர்” என தெரிவித்தார். மேலும், கடந்த 19-ம் தேதி வாக்களித்தபோது, தனக்கு அழியாத மை வைக்கப்பட்டதாகவும், 2-வது முறையாக வாக்களித்திருந்தால் இடது கை நடுவிரலில் அழியாத மை வைத்திருக்க வேண்டும், ஆனால் நடு விரலில் அழியாத மை வைக்கவில்லை என்றார்.
இதையடுத்து வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி ஆய்வு செய்தார். அதில், வாக்களித்து உள்ளார் என்பதை குறிக்கும் வகையில், அவரது பெயர் ‘டிக்‘ செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வேட்பாளர்களின் முகவர்கள் வைத்திருந்த வாக்காளர் பட்டியலிலும் ‘டிக்’ செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி நடவடிக்கை மேற்கொண்டு, டெண்டர் வாக்கு மூலம் ‘சாது’ கோவிந்தராஜியை வாக்களிக்க அனுமதித்தார். இதைத்தொடர்ந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளதாக கூறி, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.