

மதுரை: 6 மாத காலம் கெடு வழங்கியும் கடைகளை அகற்றப்படாத நிலையில், மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் உத்தரவின் பேரில், புதுமண்டபம் பகுதியில் இருந்த கடைகளை இந்து அறநிலையத்துறையினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே பழமை வாய்ந்த புதுமண்டபம் உள்ளது. பாரம்பரியமான இந்த புதுமண்டபம் கட்டிடமும், அதில் அமைந்துள்ள அரிய வகை சிற்பகங்களும் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதன் பெருமைகளை அறியாமல் ஆரம்பகாலத்தில் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், இந்த புதுமண்டபத்தை வணிக நோக்கில் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு வாடகைக்கு விட்டது. அதில், 302 கடைகள் செயல்பட்டன.
இதனால், மீனாட்சியம்மன் கோயில் வரும் பக்தர்கள், புதுமண்டபத்தின் சிறப்புகளையும், அதன் சிற்பங்களையும் தெரிந்துகொள்ளாமல் சென்றனர். தற்போது இந்த புதுமண்டபத்தை வியாபாரிகளிடம் இருந்து மீட்கவும், அதன் பாரம்பரியத்தையும், சிற்பங்களையும் பாதுகாக்கவும் புதுமண்டபம் வியாபாரிகளுக்காக மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குன்னத்தூர் சத்திரத்தில் வணிக வளாகம் கட்டியது.
தற்போது இந்தக் கட்டிடம் கட்டி திறக்கப்பட்ட நிலையில், அங்கு வியாபாரிகள் செல்வதற்கான முழுமையான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து கொடுக்கவில்லை என கூறி அங்கிருந்து செல்ல வியாபாரிகள் மறுத்தனர். அதனால், வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கியும், புதுமண்டபத்தை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தால் மீட்க முடியவில்லை.
இந்த நிலையில், அதிகாலை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அதிகாரிகள், ஊழியர்கள் அதிரடியாக போலீஸார் துணையுடன் புதுமண்டபத்திற்குள் புகுந்து கடைகளின் பூட்டை உடைத்து அவற்றின் பொருட்களை காலி செய்தனர். அதற்குள் தகவல் அறிந்து அங்கு திரண்ட வியாபாரிகள், கோயில் நிர்வாகத்திற்கு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து ஏற்பட்ட பேச்சுவார்த்தையில், வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை காலி செய்வதாக எழுதிக் கொடுத்ததால், கோயில் நிர்வாகம் கடைகளின் பூட்டை உடைத்து காலி செய்வதை நிறுத்தியது. இதுவரை 14 கடைகளை வியாபாரிகள் காலி செய்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயன் கூறும்போது, புதுமண்டபம் வியாபாரிகளுக்கு நாங்கள் வணிக வளாகம் கட்டி கொடுத்துவிட்டோம். அங்கு மின் இணைப்பு வழங்கிவிட்டோம். வீடுகளைப் போல், கடைகளுக்கு தனிப்பட்ட முறையில் வியாபாரிகள்தான் மின் இணைப்பு பெற வேண்டும். கடையை காலி செய்வதை தவிர்க்க என்ன காரணம் வேண்டுமானால் வியாபாரிகள் கூறுவர்” என்றார்.
இதனிடையே, ”படிப்படியாக புதுமண்டபத்தில் காடைகளை காலி செய்து வருகிறோம். ஒரிரு வாரத்தில் புதுமண்டபத்தை மீட்டுவிடுவோம்” என மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகரிகள் கூறியுள்ளனர்.