அறங்காவலர் இல்லாத கோயில்களில் ஊழியர்களை நியமித்ததில் சட்டவிரோதம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்.
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: அறங்காவலர்கள் இல்லாத கோயில்களின் நலனுக்காக அறநிலையத் துறை ஊழியர்கள், கோயில் ஊழியர்களாக தற்காலிகமாக அயல்பணியில் நியமித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகக் கோயில்களுக்கு அறநிலையத் துறை ஊழியர்களை அயல்பணியாக நியமித்ததை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ''கோயில் ஊழியர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, அறநிலையத் துறை ஆணையருக்கு இதில் அதிகாரமில்லை'' எனவும் மனுதாரர் வாதிட்டார். மேலும், ''தமிழகம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் கோயில்களில், 19 ஆயிரம் கோயில்களில் பரம்பரை அறங்காவலர்கள் இல்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அறங்காவலர்கள் நியமன நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அறங்காவலர் நியமனம் தொடர்பான நடைமுறைகளில் சுணக்கம் ஏற்பட்டதாகக் கூறிய தலைமை வழக்கறிஞர், ''விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்'' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோயில்களில் பல ஆண்டுகள் அறங்காவலர்கள் நியமிக்காதது துரதிருஷ்டவசமானது எனவும், கோயில் நிர்வாகத்தை கவனிக்க ஏதுவாக ஊழியர்களை நியமிக்க அறநிலைய துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால், கோயில் நலனை கருதி அயல்பணியில் அறநிலைய துறை ஊழியர்களை தற்காலிகமாக நியமித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் தெளிவுபடுத்தினர்.

அறங்காவலர்கள் நியமனத்தை உயர் நீதிமன்றம் கண்காணிப்பதாகவும், விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்ப்பதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in