

மதுரை: குற்ற வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போலீஸாரின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரை கீரைத்துறை காமராரஜபுரம் பதியைச் சேர்ந்த ரவுடி வெள்ளை காளி. இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல், வழிப்பறி உள்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தென்காசியில் கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சமீபத்தில் வெள்ளை காளி கைதானார்.
பின்னர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி வெள்ளை காளி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதி, ''மனுதாரர் மீது கொலை, கொள்ளை உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை போலீஸார் முறையாக விசாரித்து கீழமை நீதிமன்றத்தில் இதுவரை ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? பல சாட்சிகள் இந்நேரம் இறந்திருக்க வாய்ப்பும் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'' என கேள்வி எழுப்பினார்.
பின்னர், இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் மார்ச் 13-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.