Published : 01 Apr 2016 08:28 PM
Last Updated : 01 Apr 2016 08:28 PM

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவும், திமுகவும் ரூ.9,000 கோடி பதுக்கல்: ராமதாஸ் குற்றச்சாட்டு

அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைத்துள்ள பணத்தை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படை நடத்திய ஆய்வில் இதுவரை ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் பெருமிதத்துடன் கூறி வரும் நிலையில், தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அதிமுகவும், திமுகவும் 9000 கோடி ரூபாயை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பதுக்கி வைத்துள்ளன என்பது அந்த செய்தியாகும். தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.2000 முதல் ரூ.3000 வரை பணம் கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள 5.79 கோடி வாக்காளர்களில் 60 விழுக்காட்டினருக்கு பணம் கொடுக்க இக்கட்சிகள் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக ரூ.9000 கோடியை ஒதுக்கியிருப்பதாகவும் தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபின் நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு முன்பே அனைத்து தொகுதிகளுக்கும் பணம் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும், ஊராட்சிவாரியாக பணம் பிரித்துத் தரப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் வரையறுத்திருக்கிறார். ஆனால், மக்களை மதிக்காமல், வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் கலாச்சாரத்தில் இரு திராவிடக் கட்சிகளும் ஈடுபடுவது ஜனநாயகத்தை அழித்து விட்டு பணநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு சமமானதாகும். ஒரு தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மட்டும் ரூ.9000 கோடியை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் செலவழிக்கின்றன என்றால் ஆட்சிக்காலத்தில் அவை எவ்வளவு ஊழல் செய்திருக்கும்? என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. ஆனால், இப்போது கலாச்சாரம் என்பதே வாக்குக்கு பணம் கொடுப்பது தான் என்றாகி விட்டது. திருமங்கலம் கலாச்சாரம், திருவரங்கம் கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டி வேறு எந்த கலாச்சாரமும் மக்களுக்கு தெரியாத அளவுக்கு ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரம் மக்களிடையே புகழ் பெற்றிருக்கிறது.

5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டும் கட்சிகள், அதிலிருந்து ஒரு பகுதியை மக்களிடம் வாரி இறைத்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடத் துடிக்கிறார்கள். ஊழல் செய்து பணம் குவிக்கும் இக்கட்சிகள் தங்களின் ஊழல் குறித்து மக்கள் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆட்சியில் இருக்கும் போது இலவசங்களையும், தேர்தலின் போது ஓட்டுக்கு பணத்தையும் கொடுத்து அவர்களையும் ஊழல்வாதிகளாக மாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

டெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வு மையம் (Centre for Media Studies - CMS) நடத்திய ஆய்வில் ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்குவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் 78 விழுக்காட்டினரின் வாக்குகளும், ஒட்டு மொத்த மக்களில் 34 விழுக்காட்டினரின் வாக்குகளும் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளிடம் எப்போது பணம் வாங்குகிறோமோ, அப்போதே அவர்களின் தவறுகளை தட்டிக்கேட்கும் உரிமையையும், தகுதியையும் இழந்து விடுகிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்காத, வளர்ச்சிக்கான செயல் திட்டம் கொண்டுள்ள கட்சியால் தான் உண்மையான மக்களாட்சியை வழங்க முடியும்.

எனவே, அரசியல் கட்சிகளை அவர்களின் கொள்கைகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கணித்து வாக்களிப்பது தான் சரியானதாக இருக்குமே தவிர, அவர்கள் தரும் பணத்தின் அடிப்படையில் வாக்களிப்பது சரியானதாக இருக்காது... அது நம்மையே அடகு வைப்பதற்கு சமமாகும்.

ஓட்டுக்களைப் பணம் கொடுத்து வாங்கும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒடுக்கப்படாவிட்டால் தேர்தல் நடத்தப்படுவதன் நோக்கமே சிதைக்கப்பட்டுவிடும். பணம் இருக்கும் கட்சிகள் மட்டும் தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையை அது ஏற்படுத்தி விடும். ஜனநாயகத்திற்கு இது மிகப்பெரிய அவலமாகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குவதை இரு திராவிடக் கட்சிகளும் வழக்கமாக வைத்துள்ளன. இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க அவை திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்திருந்தன. தமிழக அரசு நிர்வாகத்தில் உயர்பதவியில் உள்ள அதிகாரி ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இதுபற்றி விரிவான விசாரணை நடத்துவதற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஆளும் அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைத்துள்ள பணத்தை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். இதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து தான், தமிழகத்தில் நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்தும் திறன் ஆணையத்திற்கு உள்ளதா? என்பதை அறிய முடியும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளின் பதிவு மற்றும் அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். இத்தகைய அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படுவதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x