

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வருவாய் துறையின் கீழ் செயல்படும் நில அளவை,பதிவேடுகள் துறையில் பணியிடங்களை குறைத்து, தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பெரும் கவலையும், மிகுந்த ஏமாற்றமும் அளிக்கின்றன.
ஏழைகளின் கனவை இந்த நடவடிக்கை சிதைத்துவிடும். கருணைஅடிப்படையில் வாரிசுகளுக்கு பணிவாங்க முடியாது. துணை ஆய் வாளர், ஆய்வாளர் நிலையில் ஊதிய முரண்பாடுகள் ஏற்படும்.
தவிர, நில அளவை குறித்த பணிகள் அனுபவ அடிப்படையில் செய்யப்படுபவை. ஒருவர் பொறியியல் பட்டம்படித்துவிட்டதால் மட்டுமே நேரடியாக துணை ஆய்வாளர், ஆய்வாளர் பணிக்கு வந்து, அந்த பணிகளை நிறைவேற்ற முடியாது. அரசின் இந்த மாற்றம், நில அளவை, பதிவேடுகள் துறையின் பணிகள், செயல்பாடுகளை பாதித்து, நிலைகுலையச் செய்துவிடும்.
நில அளவையர் மற்றும் அதுசார்ந்த பணியிடங்கள் படிப் படியாக குறைக்கப்படும் நிலையில், மற்றொருபுறம் அப்பணிகளை தனியார் மேற்கொள்வதற்காக நிலஅளவையர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உரிமம்பெற்றவர்கள் தனிப்பட்ட முறையில் நில அளவை செய்ய முடியும்.ஆனால், அவர்கள் நில அளவை செய்து வழங்கும் சான்றிதழ்களை நீதிமன்றங்கள் ஏற்பதில்லை. அதனால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. அரசு நில அளவையர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது.
தமிழக நில நிர்வாக ஆணையர், இயக்குநர் பரிந்துரை செய்துள்ள மாற்றங்களை அரசு ஏற்றுக்கொண்டால், நில அளவை மற்றும் அதுசார்ந்த பணிகளில் உள்ள 7,000 பணியிடங்கள் ஒழிக்கப்படும். அந்த குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும். அத்தகைய பாதிப்பை அரசு அனுமதிக்க கூடாது.
‘அரசு ஊழியர்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். தமிழக அரசில் புதிதாக 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்’ என்று என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கு நேர்மாறாக, ஏற்கெனவே உள்ள அரசு பணியிடங்களை ஒழிக்கவும், வேலைவாய்ப்புக் கான நடைமுறைகளை மாற்றவும் அதிகாரிகள் முயலக் கூடாது.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலையிட்டு, நில அளவைபணியாளர் நலனுக்குஎதிரான மாற்றங்களை தடுக்க வேண்டும். இப்போது உள்ள நிலையே தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.