

சென்னை: சென்னையில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, பெண் காவலரின் செல்போனை திமுக வட்டச் செயலர் பறித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி 115-வது வார்டு திமுக வேட்பாளர் ஈஸ்வரிக்கு ஆதரவாக, அவரது கணவரும், திமுக 115-வது வட்டச் செயலருமான வெங்கடேஷ், தனது ஆதரவாளர்களுடன் களப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குள் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்த வெங்கடேஷை, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வெங்கடேஷ், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, போலீஸாரை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். இதை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மற்றொரு பெண் காவலர், தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இதை கவனித்த வெங்கடேஷ் அந்த செல்போனைப் பிடுங்கி, பெண் போலீஸை மிரட்டியுள்ளார்.
ஜெயக்குமார் குற்றச்சாட்டு
இது தொடர்பான வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, "உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் 115-வது வார்டு திமுக வேட்பாளர் ஈஸ்வரியின் கணவரும், வட்டச் செயலருமான வெங்கடேஷ் கள்ள ஓட்டுபோட முயன்றதை தடுத்து, அதை போனில் பதிவு செய்து கடமையாற்றிய பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரிடமிருந்து போனை பிடுங்கியது அராஜக செயல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல மற்றொரு ட்விட்டர் பதிவில், "திருவல்லிக்கேணியில் திமுகவினர் காவல் துறையினரையும், தேர்தல் அதிகாரிகளையும் மிரட்டியுள்ளனர். காவல் துறை அதிகாரியை டிரான்ஸ்பர் செய்துவிடுவேன், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், போலீஸாரை திமுகபிரமுகர் வெங்கடேஷ் மிரட்டும் வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து ஜாம்பஜார் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.