

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகர் உட்பட 11 பேர் மீது திருவான்மியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 179-வது வார்டில் திமுக சார்பில் கயல்விழி, அதிமுக சார்பில் ஜமுனா போட்டியிட்டனர்.
ஓடைக்குப்பம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 10-க்கும் மேற்பட்டோர் வாக்குப்பதிவு மையத்துக்குள் புகுந்து, தகராறில் ஈடுபட்டதுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பினர். முன்னதாக, அந்த கும்பல் வாக்காளர்களையும், வாக்குச்சாவடி அலுவலர்களையும் மிரட்டியுள்ளது.
இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியது திமுக பிரமுகரான திருவான்மியூர் கதிரவன்(35) மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.
அதிமுகவில் இருந்த கதிரவன் தற்போது திமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்றியுள்ளார். இவரது உறவினர் திமுகவில் நிர்வாகியாக உள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
3 பிரிவுகளில் வழக்கு பதிவு
இதையடுத்து, கதிரவன் உட்பட 11 பேர் மீது, அரசு சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவாமியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, 179-வது வார்டில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ககன் தீப் சிங் பேடி, மாநில தேர்தல் ஆணையருக்கு விசாரணை அறிக்கையை அனுப்பிவைத்துள்ளார்.