மேட்டூர் தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் 173-வது முறையாக மனு

மேட்டூர் தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் 173-வது முறையாக மனு
Updated on
1 min read

மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் பத்மராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன். இவர் நேற்று மேட்டூர் சார் ஆட்சியர் மேகனாத ரெட்டியிடம், தனது 173-வது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். இவர் எதிர்த்தவர்களில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

இந்நிலையில் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மேட்டூர் தொகுதியிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து உளுந்தூர்பேட்டையிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். நேற்று மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இவரின் இந்த தொடர் தோல்வி லிம்கா சாதனை புத்தகத்தில் 3 முறையும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான பதிவையும் ஏற்படுத்தியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு இவர் ஒரே சமயத்தில் 5 மாநிலங்களில் 8 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால், சுயேச்சை வேட்பாளர்களை கட்டுப்படுத்த ஒருவர் இரண்டு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டது. இதேபோல, வைப்பு தொகையும் அதிகரிக்கப்பட்டது.

வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதை லட்சியமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in