Published : 21 Feb 2022 08:20 AM
Last Updated : 21 Feb 2022 08:20 AM

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்: அரசுக்கு புதிதாக மனு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: முன்களப் பணியாளர் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில், எம்பிபிஎஸ் சீட் கேட்டு அரசுக்கு புதிதாக மனு அனுப்ப 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வில்லிபுத்தூரைச் சேர்ந்த அரவிந்த், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது தந்தை பாலசுப்பிரமணியன் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உள்ளார். அவர் கரோனா முன்களப் பணியாளர் பட்டியலில் வருகிறார்.

நான் நீட் தேர்வில் 2021-ல் 463மதிப்பெண்கள் பெற்றேன். 2021-2022 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் கரோனா முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் எனக்கு நடப்பு கல்வியாண்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி அப்துல்குத்தூஸ் விசாரித்தார். மத்திய அரசு சார்பில், கரோனாவால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மனுதாரர் கரோனாவால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளரின் வாரிசு அல்ல. இதனால் அவருக்கு முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ் சீட் வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் சரியான அதிகாரிகளுக்கு மனு அனுப்பவில்லை. எனவே மனுதாரர் 2 வாரத்தில் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதாரப் பணிகள் இயக்குநருக்குப் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை சட்டப்படியும், தகுதி அடிப்படையிலும் அதிகாரிகள் விசாரித்து 2 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x