Published : 14 Apr 2016 04:55 PM
Last Updated : 14 Apr 2016 04:55 PM

மக்களின் எண்ணங்களே திமுக-வின் தேர்தல் அறிக்கை: பாலக்கோட்டில் கனிமொழி எம்.பி பேச்சு

திமுக, மக்களின் எண்ணங் களை சேகரித்து தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது என்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசினார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக-வின் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களை சந்திக்க வரும் ஜெயலலிதா ‘நீங்கள் செய்வீர்களா?’ என்று கேட்கிறார். அவரிடம் வாக்காளர்களாகிய நீங்கள், ‘ஐந்தாண்டுகளில் மக்களுக்காக ஏதாவது செய்தீர்களா?’ என்று கேளுங்கள். மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் மின் திட்டம் தொடர்பாகத் தான் தமிழக முதல்வரை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால், தன் மாநிலத்தின் நலன் சார்ந்த திட்டத்திற்காகக் கூட ஜெயலலிதா அவரை சந்திக்கவில்லை. இப்படி மக்கள் மீது அக்கறையற்ற ஜெயலலிதாவா, 92 வயதிலும் மக்கள் நலன் பற்றியே சிந்திக்கும் கருணாநிதியா என யோசித்து முடிவெடுங்கள்.

வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்கு மாறாக ஸ்டிக்கர் ஒட்டிய அரசு தான் அதிமுக அரசு. கடந்த 5 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 432 கோடி ரூபாய் மதிப்பில் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மதுபானம் வாங்கியுள்ளது. மதுவிலக்கு கொண்டு வந்தால் தனக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை மூலம் கிடைத்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பறிபோகும் என்று நினைக்கிறார். நூலகங்களை விட அதிக அளவில் தமிழகத்தில் மதுக்கடைகள் தான் உள்ளது.

விடியல் மீட்பு பயணத்தின்போதும், தேர்தல் அறிக்கைக்காகவும் தமிழகம் முழுக்க தொடர் பயணங்கள் மேற்கொண்டு மக்களை சந்தித்து கருத்துகளை சேகரிக்க வலியுறுத்தினார் கருணாநிதி. அதன் அடிப்படையில் தான் திமுக-வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. திமுக-வின் தேர்தல் அறிக்கை முழுக்க மாநில மக்களின் மனசாட்சியாக அமைந்துள்ளது. எனவே தமிழகத்தை சூழ்ந்துள்ள இருள் நீங்க வரும் தேர்தலில் சூரியனை உதிக்கச் செய்யுங்கள்.

இவ்வாறு பேசினார்.

இந்தக் கூட்டத்தில், முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி, தாமரைச் செல்வன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் காஞ்சனா கமல நாதன், இன்பசேகரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x