

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பென்னாத் தூர், திருவலம், அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, தக்கோலம், நாட்றாம்பள்ளி, பனப்பாக்கம் போன்ற பேரூராட்சிகளில் 80 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் ஒரு சில இடங்களில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள் உள்ளன. இதில், 2 லட்சத்து 78 ஆயிரத்து 156 ஆண்கள், 3 லட்சத்து 162 பெண்கள், 72 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 883 ஆண்கள், 1லட்சத்து 97 ஆயிரத்து 780 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 11 பேர் உள்பட 3 லட்சத்து 85 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்களை காட்டிலும், பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளனர்.
இறுதி நேர முடிவுபடி வேலூர் மாநகராட்சி தேர்தலில் 65.50 சதவீதமும், குடியாத்தம் நகராட்சியில் 67.35 சதவீதமும், பேரணாம்பட்டு நகராட்சியில் 63.62 சதவீதமும், ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் 78.78 சதவீதமும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 77.76 சதவீதமும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 81.65 சதவீதமும், திருவலம் பேரூராட்சியில் 80.7 சதவீதம் என மொத்தமாக 66.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் உள்ளன. 407 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 1 லட்சத்து 60 ஆயிரத்து 803 ஆண்கள், 1 லட்சத்து 73 ஆயிரத்து 326 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 3 லட்சத்து 34 ஆயிரத்து 45 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 422 ஆண்கள், 1 லட்சத்து 23 ஆயிரத்து 898 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 325 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர்.
இதில், அரக்கோணம் நகராட்சியில் 62.20 சதவீதமும், ஆற்காடு நகராட்சியில் 72.89 சதவீதமும், மேல்விஷாரம் நகராட்சியில் 64.95 சதவீதமும், ராணிப்பேட்டை நகராட்சியில் 73.39 சதவீதமும், சோளிங்கர் நகராட்சியில் 71.73 சதவீதமும், வாலாஜா நகராட்சியில் 76.57 சதவீதமும், அம்மூர் பேரூராட்சியில் 83.91 சதவீதமும், கலவை பேரூராட்சியில் 82.24 சதவீதமும், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 79.16 சதவீதமும், நெமிலி பேரூராட்சியில் 81.64 சதவீதமும், பனப்பாக்கம் பேரூராட்சியில் 80.44 சதவீதமும், தக்கோலம் பேரூராட்சியில் 82.12 சதவீதமும், திமிரி பேரூராட்சியில் 83.09 சதவீதமும், விளாப்பாக்கம் பேரூராட்சியில் 85.95 சதவீதம் என மொத்தமாக 72.24 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளன. 171 வார்டு களுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், 1 லட்சத்து 51 ஆயிரத்து 745 ஆண்கள், 1 லட்சத்து 63 ஆயிரத்து 389 பெண்கள், 67 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தமாக 3 லட்சத்து 15 ஆயிரத்து 201 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்றிருந்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 291 ஆண்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து 850 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தமாக 2 லட்சத்து 16 ஆயிரத்து 156 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
அதன்படி, திருப்பத்தூர் நகராட்சியில் 72 சதவீதமும், ஜோலார்பேட்டை நகராட்சியில் 77 சதவீதமும், வாணியம்பாடி நகராட்சியில் 66 சதவீதமும், ஆம்பூர் நகராட்சியில் 65 சதவீதமும், ஆலங்காயம் பேரூராட்சியில் 65 சதவீதமும், உதயேந்திரம் பேரூராட்சியில் 78 சதவீதமும், நாட்றாம்பள்ளி பேரூராட்சியில் 85 சதவீதம் என மொத்தமாக 69 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப் பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடை பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளதால் வெற்றி,தோல்விகளை பெண்களே தீர்மானிக்கின்றனர்.