

அரியலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ராம.ஜெயவேலை ஆதரித்து, அரியலூர், கீழப்பழூரில் அக்கட்சியின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பேசியது:
இந்த தேர்தலில் நாங்களே முதன்மையான அணி. ஊழல் கட்சிகளான திமுக, அதிமுகவை தூக்கியெறிந்துவிட்டு, லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி விஜயகாந்த் தலைமையில் அமையப்போகிறது.
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்தை திணிப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். விஜயகாந்த் ஆட்சியில் விவசாயம், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், தமிழக நதிகளை இணைப்போம்.
திமுக, அதிமுகவால் வஞ்சிக்கப்பட்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. இக்கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
அரியலூரில் சிமென்ட் ஆலைகளுக்கு தனி சாலை அமைக்கவும், அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தவும், முந்திரி தொழிற்சாலை அமைக்கவும், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வாயிலில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கவும், திருமானூரில் நவீன அரிசி ஆலை, வி.கைகாட்டியில் பேருந்து நிலையம், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.