தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோம்: பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அமைப்பாளர் குஷ்பு நம்பிக்கை

தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோம்: பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அமைப்பாளர் குஷ்பு நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை மந்தைவெளியில் உள்ளராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்றுவாக்களித்த பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அமைப்பாளரும் நடிகையுமான குஷ்பு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்களிப்பது என்பது அனைவரின் ஜனநாயக கடமை. தனதுவாக்கை அளிக்காமல் வீட்டிலிருந்து கொண்டு குறை மட்டும் கூறுவது மிகப் பெரிய தவறு.

தங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பாஜக தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, நாங்கள் தனித்துநின்றாலும் வெற்றி பெறுவோம்என்று எங்களுக்கு தைரியம் அதிகரித்துவிட்டது. நோட்டாவோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது 4 பேர் சட்டப்பேரவைக்கு சென்றுள்ளனர். வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதைப் பற்றி இப்போது பேச முடியாது. தமிழகத்தில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் பணி தொடரும்: சீமான்

சென்னையில் நேற்று வாக்களித்த நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காசுக்காக சாலை போடுவதால்தான், சிறிய தூறல் விழுந்தால்கூட கற்கள் பெயர்ந்து போகின்றன. தலைநகரில்கூட பராமரிப்பு என்ற பெயரில் மின்சாரத்தை நிறுத்துகின்றனர். இலவசமின்சாரம் கொடுப்பதாக கூறுகின்றனர். அதற்கு மின்சாரம் போதுமான அளவு இருக்கிறதா, தடையின்றி மின்சாரம் வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படுவது இல்லை. கடையில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் நிலை உள்ளது.

அடுத்து, எந்த இடமும் மக்கள்வாழக்கூடிய இடமாக இல்லை. குப்பை மேடாக இருக்கிறது.

மாநகராட்சி பள்ளிகள் தரம்உயர்த்தப்படவில்லை. ஆண்டுதோறும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். மழைநீர் வடிவதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி, ரூ.3,000 கோடி ஒதுக்குவார்கள். இதுவரை ஒதுக்கிய பணத்தில் போடப்பட்ட கால்வாய்கள் எங்கே?

வீடு கட்ட, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் இணைப்பு, எரிவாயு இணைப்பு என எல்லாவற்றுக்கும் வார்டு கவுன்சிலர் கையெழுத்து வேண்டும். ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு காசு? அதனால்தான் கோடிக்கணக்கில் செலவு செய்து சீட் வாங்குகின்றனர். ஜெயித்தால், இந்த முதலீட்டை எப்படி திரும்ப எடுப்பது என்று கணக்கிடுவார்கள்.

வெற்றி பெற்றவர்கள் 5 ஆண்டுகள்தான் வேலை செய்வார்கள்.

நாங்கள் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in