

இளைஞர்களை கவரும் வண்ணம் இணையதளம் மூலம் தனது பிரச்சாரத்தை திமுக தலைவர் கருணாநிதி நேற்று தொடங்கினார்.
2014 மக்களவைத் தேர்தலின் போது பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இது அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. மோடியின் பாணியில், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்களும் பேஸ்புக், ட்விட்டரில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி திமுகவின் இணையதள பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கி வைத்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றவர்களின் பிரச்சாரம், 1967 முதல் 2011 வரை திமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் அதிமுக அரசுக்கு எதிரான விஷயங்கள் போன்றவற்றை பேஸ்புக், ட்விட்டர், வலைதளம் போன்றவற்றில் பதிவேற்ற திமுக இணையதளக் குழு திட்டமிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் திமுகவின் சமீபகால செயல்பாடு களை வைத்து இளைஞர்கள் பலர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், திமுகவின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கடந்த கால சாதனைகள் குறித்தும் இளைஞர்களுக்கு தெரியப் படுத்தும் முயற்சியாகவே, இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.