

தமிழகத்தில் ஆளும்கட்சியின் பணப்பதுக்கல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேற்று நேரில் புகார் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் டெல்லியில் நேற்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக ஆளும் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஒரு மாதமாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டத் துக்கு புறம்பாக ஆளும் அதிமுகவினரின் பணப் பரிமாற்றம் தொடர்ந்து வருகிறது. ஆம்புலன்ஸ், பால் வேன்கள், குடிநீர் டேங்கர் லாரிகள் மற்றும் காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களிலும் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. இக்குழுவினர் குறைந்த அளவிலான பணத்தை மட்டுமே கைப்பற்றி வருகின்றனர். ஆனால், பெருமளவில் பணம் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்படவில்லை.
சென்னை மற்றும் கரூரில் அதிமுக பிரமுகர்களிடம் இருந்து தலா ரூ. 5 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ. 5 கோடி வீதம் ரூ. 1000 கோடி வரை பணம் பதுக்கி வைத்திருப்பது தெளிவாகிறது.
கடந்த 23-ம் தேதி கரூரில் அன்புநாதன் என்பவரின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கரூரில் நடக்கும் ஹவாலா பணப் பரிமாற்றம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் செய்துள்ளோம்.
தேர்தல் ஆணையத்தில் பணியாற்றக் கூடிய அதிகாரிகள், அரசு ஊழியர்கள் தங்கள் கடைமையை செய்யவில்லை. அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்களின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவினர் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கும், தேர்தல் விதிமீறல்களுக்கும் அதிகாரிகள் உறுதுணையாக உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். ஆனாலும் அவர் உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 22-ம் தேதி கரூர் மாவட்டத்தில் ரூ. 4 கோடியே 77 லட்சமும், 25-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் ரூ. 3 கோடியே 39 லட்சமும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஆம்னி பேருந்தில் ரூ. 1 கோடியே 45 லட்சம் கைப்பற்றப்பட்டது.
அதிமுகவினரின் இந்தப் பணப்பதுக்கலை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தலையிட்டு அதிமுகவினரின் பணப் பதுக்கல், இதில் தொடர்புடைய அன்புநாதன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சிபிஐ மூலம் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள், அரசு ஊழியர்கள் தங்கள் பணியை சரியாக செய்வதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழகத் தேர்தலை கண்காணிக்கும் பணியில் காவல்துறை ஆணையர், ஐஜி அந்தஸ்துக்கு மேல் உள்ள வேறு மாநில காவல் துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.