Published : 20 Feb 2022 06:51 AM
Last Updated : 20 Feb 2022 06:51 AM

தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள்.

ராமேசுவரம்

தமிழக நாட்டுப்படகு மீனவர்கள்6 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட நம்புதாளையைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்குச் சொந்தமான இன்ஜின் பொருத்தப்பட்டநாட்டுப் படகில் முத்துக்குமார்(32), பாலு(47), ரெங்கதுரை(48), கம்மாகரையான்(64), பூபதி(32), மனோஜ்குமார்(25) ஆகிய 6 மீனவர்கள் அண்மையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அன்றைய தினம் இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நாட்டுப் படகையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

6 பேர் மீதும் எல்லை தாண்டிவந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று பிற்பகலில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை வரும் மார்ச் 4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x