

திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்குட்பட்ட புதுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றார். அவரது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். அவர் வெளியே வந்து கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.
அவர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று விசாரித்தபோது, திமுக வேட்பாளர் மஞ்சுளா தேவி, முத்துலட்சுமியின் வாக்கை செலுத்திஇருப்பது தெரியவந்தது. இதைஅடுத்து, முத்துலட்சுமிக்கு, டெண்டர் வாக்கு அளிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதன்பின் அவர் வாக்கை செலுத்தினார்.
இதுகுறித்து விசாரித்தபோது தெரிய வருவதாவது: மஞ்சுளா தேவிக்கு கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்646-வது வாக்குச்சாவடியில் பெயர் உள்ளது. ஆனால், அவர் அதே பள்ளி வளாகத்தில் உள்ள 647-வதுவாக்குச்சாவடிக்குச் சென்று, தனதுவாக்காளர் வரிசை எண் 673-ஐமட்டும் தெரிவித்து, அந்த வாக்குச்சாவடியில், அதே வரிசை எண் கொண்ட முத்துலட்சுமி என்பவரது வாக்கை தவறுதலாக செலுத்தியுள்ளார். அதன்பிறகே அவரது பெயர் 646-வது வாக்குச்சாவடியில் இருப்பது தெரியவந்து, அங்கும் சென்று தனது வாக்கை செலுத்தியுள்ளார். இதையடுத்து மஞ்சுளா தேவியை தகுதி நீக்கம் செய்ய பிற கட்சி வேட்பாளர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதாவது, “இதுகுறித்து விசாரித்துவாக்குச்சாவடி அலுவலரிடம் அறிக்கை கேட்கப்படும்” என்றார்.