

மதுவையும் ஊழலையும் ஒழித்தால் தான் தமிழகம் முன்னேறும் என பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் உங்கள் ஊர் உங்கள் அன்புமணி என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
மக்களின் தேவையை அறிந்து திமுகவும் அதிமுகவும் ஆட்சி நடத்தவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். மக்கள் எவ்வளவு காலம்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். ஊழல் ஆட்சிகளை துரத்தி அடித்தால்தான், மக்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மதுவையும் ஊழலையும் ஒழித்தால்தான் தமிழகம் முன்னேறும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் மது குடிக்கும் காட்சியைப் பார்த்தோம். மதுவை ஒழிக்கா விட்டால், அடுத்த தலைமுறை இல்லாமல் போய்விடும். மதுவை ஒழிக்க 34 ஆண்டுகளாக ராமதாஸ் போராடுகிறார். இப்போது, அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் போராடுகின்றன. இது பாமகவுக்கு கிடைத்த முதல் வெற்றி. சாராயத்தால் ஒரு கிராமத்தில் 60 விதவைகள் உள்ளனர். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். மணல், தாது மணல், கிரானைட் முறைகேடுகளைத் தடுத்தால் அரசுக்கு ரூ.84 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.
பால், அரிசி, பருப்பு, சாலை என அனைத்திலும் ஊழல் இருக்கிறது. பிறப்புச் சான்று, வீடு கட்ட அனுமதி போன்ற எல்லா அடிப்படைத் தேவைகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பாமக ஆட்சியில் அரசுத் துறைகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும்.
ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். இலவசப் பொருட்களைத் தரமாட்டோம். அதற்கு மாறாக தரமான இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் வழங்குவோம். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும். சோறு போடும் விவசாயிகளை நான் கடவுளாக பார்க்கிறேன். தமிழகத்தில், அனைத்து ஆறுகளிலும் 5 கி.மீ., தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும்.
தி.மலை மாவட்டத்தில் சிறப்பு வேளாண்மை பொருளாதார மண்டலமும் வேலூர், தஞ்சை, நெல்லையில் வேளாண் பல்கலைக் கழகமும் தொடங்கப்படும். ஆரணியில் பட்டு ஜவுளிப் பூங்கா தொடங்கப்படும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,200 மற்றும் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, அவர்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம்” என்றார்.
கருத்துத் திணிப்பு
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பணத்தைக் கொடுத்து கருத்துக் கணிப்பை வெளியிடச் சொல்கிறார்கள். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். அது கருத்துக் கணிப்பு கிடையாது, கருத்துத் திணிப்பு. ஜெயலலிதா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
பாமகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நீதி விசாரணை நடத்தப்படும். தேர்தல் ஆணைய செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் மெத்தனமாக உள்ளது என்றார்.