

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் ஒரு வாரத்துக்கு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்,குறைதீர்வு நிகழ்ச்சி, கலந்துரையாடல், மரம் நடும் விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிஎஸ்.கோவேந்தன் கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, சுதந்திர தின அமுதப் பெருவிழாவை (ஆசாத் கி அம்ருத் மகோத்சவ்) மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் ஒரு வாரத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 21-ம் தேதி(நாளை) சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம்நடத்தப்படுகிறது. அங்கு வரும்பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் இதில் பங்கேற்று உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
22-ம் தேதி பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் 7305330666 என்ற எண்ணில் வாட்ஸ்அப் வீடியோகால் மூலம் எங்களை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம். தகவல்கள், சந்தேகங்களை கேட்டறியலாம்.
நாட்டின் வெளியுறவு கொள்கை குறித்து புரசைவாக்கம் அழகப்பா பள்ளி மாணவர்களுடன் 23-ம் தேதி கலந்துரையாட உள்ளேன். 24-ம் தேதி எங்கள் அலுவலகத்தில் ஓவியக் கண்காட்சியும், பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.
25-ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. 26-ம் தேதி கிண்டி பொறியியல் கல்லூரியுடன் இணைந்து மரம் நடும் விழாவும், 27-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.