Published : 20 Feb 2022 05:55 AM
Last Updated : 20 Feb 2022 05:55 AM

சிறு சிறு அசம்பாவிதங்களை தவிர சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு; ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையர்: வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

அடையாறு, ராயப்பேட்டை, கொத்தவால்சாவடி, பெரம்பூர் ஜமாலியா ஆகிய 4 இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் போலீஸ் அதிகாரிகள் சென்றனர்.

சென்னை

சிறிய அசம்பாவிதங்கள் தவிர சென்னையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி சென்னையில் நேற்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் 18 ஆயிரம் பேர், காவல் துறை அல்லாதோர் 4 ஆயிரம் பேர்என மொத்தம் 22 ஆயிரம் பேர்ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 213வாக்குச் சாவடிகள் பதற்றமானவாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், வாக்குப்பதிவின்போது சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் ஈடுவோர், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறை எண் வழங்கப்பட்டு இருந்தது. தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து நேற்று காலை திட்டமிட்டபடி வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து அடையார், ராயப்பேட்டை, கொத்தவால்சாவடி, பெரம்பூர் ஜமாலியா ஆகிய 4 இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் வாக்காளர்களுக்கு ஏதேனும் இடையூறு, பாதுகாப்பு குறைபாடு, மிரட்டல், அச்சுறுத்தல் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார்.

ராயப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டபோது, அதிமுக மற்றும் பாஜவைச் சேர்ந்த சில பிரமுகர்கள், ‘திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற தயார் நிலையில் வெளியே உள்ளனர். அவர்களை தடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த காவல் ஆணையர், உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட யாரையும் அனுமதிக்க மாட்டோம். மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:

சிறிய அளவிலான பிரச்சினைகளைக்தவிர வாக்குப்பதிவை பாதிக்கும் வகையில் எந்த விவகாரமும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சில இடங்களில் பணம் விநியோகம் செய்ததாகவும், உணவு வழங்கியதாகவும் புகார் வந்தது. இதுதொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 10 புகார்கள் வந்துள்ளன. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லுரி, பாரதி பெண்கள் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உட்பட 15 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியின்போது தேவைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x