

திருவான்மியூர் 179-வது வார்டில் பூத் ஸ்லிப்புடன் சேர்த்து பணம் கொடுத்த அதிமுகவினரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் நீலகண்டன் நகர் 179-வது வார்டில் உள்ள அரசு பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது, வாக்குச்சாவடிக்கு அருகே அதிமுகவினர் ஒரு சேர் மற்றும் மேஜை போட்டு பூத் ஸ்லிப் கொடுத்து கொண்டு இருந்தனர். அதன் அருகிலேயே ஒரு ஆண், ஒரு பெண் என இருவரும் கையில் பூத் ஸிலிப்புடன் சேர்த்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த திமுகவினர் அங்கிருந்த பறக்கும் படையினரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு தேர்தல் பறக்கும்படையினர் வந்தனர். பறக்கும் படையினர் வருவதை பார்த்த அதிமுகவினர் கையில் வைத்திருந்த பணம் மற்றும் வாக்குச்சீட்டை கீழே வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
அவர்களை திமுகவினரும், போலீஸாரும் சேர்ந்து விரட்டி பிடித்தனர். அதில், கலா என்ற அதிமுக பெண் நிர்வாகியை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அதிமுகவினர் வீசிச் சென்ற பூத் ஸ்லிப் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் கைப்பற்றி, கலாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேலும் சில அதிமுக நிர்வாகிகளையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தது, அவர்களை பறக்கும் படையினர் துரத்தி பிடித்ததை அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் திமுகவினர் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.
இதை பார்த்துக் கொண்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் அவர்களின் செல்போன்களை பறித்து, வீடியோ காட்சிகளை டெலிட் செய்து, பின்னர் அவர்களிடம் செல்போனை கொடுத்தார். காவல் துறை அதிகாரியின் இந்த செயலுக்கு செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதிகாரியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒருமையில் பேசியதுடன் மிரட்டவும் செய்தார் என கூறப்படுகிறது.