Published : 29 Apr 2016 09:35 AM
Last Updated : 29 Apr 2016 09:35 AM

மே 5-ம் தேதி சென்னை தீவுத் திடலில்: சோனியா - கருணாநிதி ஒரே மேடையில் பிரச்சாரம் - கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சென்னை தீவுத் திடலில் மே 5-ம் தேதி பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 17 நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மே 5-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார்.

சென்னை தீவுத் திடலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். திமுக தலைவர் கருணாநிதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார், சமூக சமத்துவப் படை கட்சியின் தலைவர் பி.சிவகாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் தீவுத் திடல் பகுதியை திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று காலை பார்வையிட்டனர்.

பின்னர் ‘தி இந்து’விடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், ‘‘சென்னை மாநகர், புறநகரில் உள்ள 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கின்றனர். இதில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பர்’’ என்றார்.

காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா கூறும்போது, ‘‘மே 5-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் செய்யும் சோனியா காந்தி, அன்று மாலை சென்னை தீவுத் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார். அதற்கான இடம், தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார்.

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி சென்னை தீவுத் திடலில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது குறிப் பிடத்தக்கது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மே 6-ம் தேதி ஓசூர், சென்னையிலும் 8-ம் தேதி வேதாரண்யம், கன்னியாகுமரியிலும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x