

திருவண்ணாமலை நகராட்சி 25-வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட் பாளர்களுக்கு சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால், தேர்தல் களத்தில் கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில், 25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்குப் பதிவு, தி.மலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 2 வாக்குச்சாவடி களில் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தொடக் கம் முதலே, விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
அப்போது வெளியாட் களை வரவழைத்து வாக்குப்பதிவு நடைபெறுவதாக கூறி திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் கூட்டணியமைத்து கூச்ச லிட்டனர்.
மேலும் அவர்கள், தேர்தல் ஆணையம் மூலம் வாக்குச்சீட்டு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினர். இப்படி யாக, அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை முன் வைத்து, வாக்குப்பதிவை நிறுத்தவும், மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காலை 11 மணி முதல் குரல் எழுப்பி வந்தனர். இதனால், அரசு மேல்நிலை பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, அரசு மேல்நிலை பள்ளி முன்பு திமுக, அதிமுகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள், பாஜக வேட்பாளரின் கணவர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர், அதிமுகவினர் ஆகியோர் கூட்டணி அமைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுப்பற்றி தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பவன்குமார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பேரில் 15 நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் அரசு மேல்நிலை பள்ளிக்கு வருகை வந்த பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் தலைமையிலான திமுக வினர், வாக்குச்சாவடி உள்ளே சென்று பார்வையிட்டனர். பின்னர், வேட்பாளர்களை அழைத்து பேசிய கம்பன், அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையர் பார்த்த சாரதியிடம், மறுவாக்கு பதிவுக்கு பெரும்பான்மையான வேட் பாளர்கள் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு அவரும், மனு கொடுங்கள், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரி வித்தார்.
இதற்கிடையில், வாக்குச்சாவடிக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான காவல் துறையினர் நின்றி ருந்தனர். அப்போது, வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த ஆண்கள் வாக்குச்சாவடி உள்ளே கம்பன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் வேட்பாளர்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனால், வாக்குப்பதிவுக்கு தடங்கல் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், வாக்குப் பதிவை பார்வையிட வந்த தேர்தல் பார்வையாளர் சங்கீதா, ஆண்கள் வாக்குச் சாவடியில் கூட்டமாக இருந் தவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திமுகவினர் வாக்குவாதம்
பின்னர் அவர், வாக்குப் பதிவுக்கு தடையாக உள்ளதாக கூறி, வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்து நின்றி ருந்த அமைச்சர் மகன் கம்பன் உள்ளிட்ட திமுகவினரை வெளி யேறுமாறு உத்தரவிட்டார். அப்போது அவரிடம், ‘வாக்குச்சீட்டு வழங்க வில்லை, வெளிநபர்கள் வாக் களித்துள்ளனர் என கூறி, தேர்தலை நிறுத்த வேண்டும் என கம்பனுடன் வந்த திமுக வினர் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
அமைதியாக வாக்குப்பதிவு
உங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை கொடுங்கள், இப்போது வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறுங்கள் என மீண்டும் உத்தரவிட்டார். இதையடுத்து, அமைச்சர் மகன் கம்பன் உள்ளிட்ட திமுகவினர் வெளியேறினர். இதற்கிடையில், வாக்குச் சாவடியில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையர் பார்த்த சாரதி, அவசர அவசரமாக வெளியேறி தனது அலுவல கத்துக்கு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து தேர்தல் பார்வையாளர் சங்கீதா மேற்பார்வையில் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.