வாக்குச்சாவடியில் ஹிஜாப் எதிர்ப்பு... பாஜக முகவர் வெளியேற்றம்... - மதுரை மேலூரில் நடந்தது என்ன?

வாக்குச்சாவடியில் ஹிஜாப் எதிர்ப்பு... பாஜக முகவர் வெளியேற்றம்... - மதுரை மேலூரில் நடந்தது என்ன?
Updated on
2 min read

மதுரை: மதுரை மேலூர் வாக்குச்சாவடி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக முகவர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கான நகர்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை தொடங்கியது. இந்த நகராட்சியில் 8-வது வார்டில் அல் - அமீன் உருது தமிழ் பள்ளி வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடியில் இன்று காலை முஸ்லிம் பெண்கள் பலர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தனர். அவர்களில் முதலாவதாக ஒரு பெண் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் நுழைந்தார்.

அப்போது பாஜக முகவர் கிரிராஜன் என்பவர், முகத்தை காட்டாமல் எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும் என்று அந்தப் பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர், முகம் தெரியும்படி ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்குச்சாவடிக்குள் வரும்படி அந்த பெண்ணிடம் கூறினார். ஆனால், வாக்குச்சாவடியில் உள்ள மற்ற திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியைச் சேர்ந்த முகவர்கள், பாஜக முகவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி மையத்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள் பாஜக முகவரிடம் ’நீங்கள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றனர். அதற்கு பாஜக முகவர், ‘‘நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன், அராஜகம் நடக்கிறது, ஏற்றுக்கொள்ள முடியாது. முகத்தை காட்டாமல் அனுமதிப்பது, கள்ளஒட்டு போட அனுமதிப்பதற்கு சமம், அவர் கள்ள ஓட்டுப்போட வந்தாரா?’’ என்று கோஷமிட்டார்.

பின்னர், அவர் வாக்குச்சாவடி மையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றததால் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸாரை வாக்குச்சாவடி அலுவலர்கள் உதவிக்கு அழைத்தனர். உடனே அங்குவந்த போலீஸார் அந்த வாக்குச்சாவடியில் இருந்த பாஜக முகவரை வெளியே வரும்படி அழைத்தனர். அவர் வெளியே வர மறுத்து தொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்றினர்.

இதனால், அரை மணி நேரம் மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல் - அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், நிலைமை சீரடைந்தபிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடர்ந்து நடந்தது. ஆனாலும், ஹிஜாப் அணிந்து வந்ததிற்கு பாஜக முகவர் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த வாக்குச்சாவடியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

மாவட்ட ஆடசியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அனீஸ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரம் வலுத்துள்ள சூழலில், இன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in